ADDED : செப் 26, 2025 01:38 AM
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, நாகோஜனஹள்ளி வருவாய் கிராமத்தில், 'ரோசன் கிரானைட்ஸ்' என்ற குவாரியில், கனிமவளம் கடத்துவதாக கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின் படி, வருவாய்த்துறையினர் ஆய்வில், குவாரி அனுமதியின்றி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், 3.30 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகை குவாரி உரிமையாளர் செலுத்தாத நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கல்குவாரியை பகிரங்க ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் உதவி கலெக்டர் பயிற்சி க்ரிதி காம்னா, தாசில்தார் சத்யா, துணை தாசில்தார் ரஹமத்துல்லா ஆகியோர் முன்னிலையில் குவாரி ஏலம் நடந்தது. இதை தாதம்பட்டியை சேர்ந்த செந்தில்அரசு என்பவர், 11.12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இந்த ஏலத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.