ADDED : செப் 25, 2025 01:35 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த தவறிய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின், மாநில தொழிற்சங்க செயலாளர் கார்த்திக் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஓசூர் மாநகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பிய கட்சியினர், கடந்த, 3 மாதங்களில் மட்டும், ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மொத்தம், 446 பேர் நாய் கடிக்கு ஆளாகி கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக குற்றம்சாட்டினர்.
மேலும், தெருநாய்களை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.