ADDED : ஜூன் 13, 2024 06:24 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாய முகாம் நேற்று துவங்கியது.
மதுரை வடக்கு தாலுகாவில் கலெக்டர் சங்கீதா தலைமையில் தாசில்தார் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஜமாபந்தியையொட்டி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பதிவு செய்யவும், தீர்வு காணவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நேற்று கூளப்பாண்டி உள்வட்டத்தைச் சேர்ந்த 17 கிராமங்களின் பொதுமக்களிடம் பட்டா மாறுதல், திருத்தம் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இன்று (ஜூன் 13) சத்திரப்பட்டி உள்வட்ட கிராமங்களுக்கான மனுக்கள் பெறப்படுகின்றன. மதுரை தெற்கு தாலுகாவில் சமூகநலத்திட்ட துணை கலெக்டர் சங்கீதா தலைமையில் ஜமாபந்தி நடந்தது.
உசிலம்பட்டி
உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் ஜமாபந்தி வருவாய்த்தீர்வாய முகாம் மரக்கன்று நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தாசில்தார் சுரேஷ் பிரடரிக் கிளமண்ட் உட்பட அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்தனர். முதல்நாள் கருமாத்துார் உள்வட்ட கிராமங்களில் இருந்து பட்டா மாறுதல், பெயர் திருத்தம் உள்ளிட்ட 104 மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.