ADDED : செப் 24, 2025 06:25 AM
மின் ஊழியர்கள் 80 பேர் கைது
மதுரை: ஒப்பந்த மின் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
மின்வாரியத்தில் பத்தாண்டுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், 2 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி, போனஸ் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டனர். நகர தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார்.
செயலாளர் அறிவழகன், மாநில துணைத்தலைவர் சுரேஷ்குமார் உட்பட பலர் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். நிர்வாகிகள் கூறுகையில், ''பணிநிரந்தரம் செய்யும் வலியுறுத்தி விரைவில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்' என்றனர்.
அடிதடி: ஒருவர் கைது
மேலுார்: கீழவளவு வெள்ளையத்தேவனுக்கும் 29, அதே ஊரை சேர்ந்த நவீனுக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் ஆக.26ல் நவீன் தலைமையில் நால்வர் வெள்ளையத்தேவனை தாக்கினர். இவ்வழக்கில் நேற்று ராஜேஷை 36, கீழவளவு போலீசார் கைது செய்தனர்.
கண்டெய்னரில் 176 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரை: மதுரை ஒத்தக்கடை சிட்டம்பட்டி டோல்கேட் அருகே போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக சென்ற கண்டெய்னர் லாரியில் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 176 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டி வந்த அருப்புக்கோட்டை அருகே ஆதிப்பட்டியைச் சேர்ந்த சேகர் மகன் மருதுபாண்டியை 39, கைது செய்தனர்.
பொதுமக்கள் போதைப்பொருட்கள், சட்டவிரோத கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான தகவல்களை தெரிவிக்க 10581 என்ற டெலிபோன் எண், 94984 10581 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.