/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்துக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குவது எப்போது? ராமேஸ்வரத்துக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குவது எப்போது?
ராமேஸ்வரத்துக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குவது எப்போது?
ராமேஸ்வரத்துக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குவது எப்போது?
ராமேஸ்வரத்துக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குவது எப்போது?
ADDED : ஜூலை 30, 2024 06:46 AM

ராமேஸ்வரம் : பாம்பன் புதிய ரயில் பாலம் பணி நிறைவு தருவாயை எட்டியுள்ள நிலையில், அக்., முதல் வாரம் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனால், ராமேஸ்வரத்துக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
செவ்வாய் தோறும் கோவையில் இருந்து ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (எண்:16618) திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் பாம்பன் கடல் பாலத்தில், புதிய ரயில் துாக்கு பாலம் பணி, 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கி, நான்கு ஆண்டுகளுக்கு பின் நிறைவு தருவாயை எட்டியுள்ளது. கடந்த வாரம் செங்குத்து துாக்கு பாலத்துக்கான லிப்ட் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
நாட்டிலுள்ள பிரமாண்ட கடல் பாலங்களில் பாம்பன் பாலம் குறிப்பிடத்தக்கது. கடலின் மேல், 2.5 கி.மீ., துாரம் பயணிப்பது ரயில் பயணிகளுக்கு அலாதிசுகம்; இதற்காகவே பலர் ராமேஸ்வரத்துக்கு ரயிலில் செல்வர்; இதனால், ராமேஸ்வரத்துக்கான டிக்கெட் முன்பதிவும்சுறுசுறுப்பாக இருக்கும்.
கடந்த, 2022 நவம்பரில், பாலத்தின் இரும்பு பிளேட் சேதமடைந்ததால், ராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரயில் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. கோவையில் இருந்து ராமேஸ்வரம் இயக்கப்பட்டு வந்த ரயில், ராமநாதபுரத்துடன் பயணத்தை நிறைவு செய்கிறது. சென்னை, மதுரை, வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள், பாசஞ்சர் உட்பட அனைத்தும் ராமேஸ்வரம் செல்வதில்லை. ரயில் பயணிகள் அங்கிருந்து பஸ் மூலம் ராமேஸ்வரம் செல்கின்றனர்.
தற்போது புதிய ரயில் பாலம் பணி நிறைவு பெற்று, விரைவில் ரயில் போக்குவரத்து துவங்க உள்ளதால், ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில் பாதை வழியில் பயணிக்க, பயணிகள் பலரும் ஆர்வமாக உள்ளனர். ராமேஸ்வரத்துக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு ரயில் பயண ஆர்வலர்களிடையே அதிகரித்துள்ளது.இது குறித்து, ரயில்வே முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், 'பாம்பன் புதிய பால பணிகள் நிறைவு பெற்று, அக்., முதல் வாரம் ரயில்கள் சோதனை ஓட்டம் நடக்க வாய்ப்புள்ளது. அக்., 31 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக முன்பதிவு துவங்கும். ரயில்கள் இயக்கம் குறித்து விரிவான அறிவிப்பு வெளியாகும்,' என்றனர்.