ADDED : செப் 25, 2025 04:18 AM

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் மற்றும் சில கிராமங்களில் உள்ள சில கோயில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு செப்.,22 முதல் விழா துவங்கி நடக்கிறது. பெண் சக்தியை போற்றும் உன்னதமான சிறப்பு வாய்ந்த நவாரத்திரியில் அம்பிகையின் அவதாரங்களாக கோயில் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து ஆராதித்து நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
திருவாடானை மற்றும் திருவெற்றியூர் அக்ரஹார தெரு வீடுகளில் வித விதமான கொலு பொம்மைகளால் வீட்டையே கோயிலாக மாற்றியுள்ளனர். இது குறித்து திருவெற்றியூர் சந்திரா கூறியதாவது:
வீட்டில் கொலு வைப்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்த ஒன்பது நாட்களும் மனம் நிம்மதியாக இருக்கும். கொலு வைத்தால் துர்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் நம் வீட்டுக்கு வருவார்கள் என்பது இறை நம்பிக்கை என்றார். திருவாடானை, திருவெற்றியூரில் தினமும் கோயில் முன்புள்ள கலை அரங்கத்தில் பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு, மேளக்கச்சேரி போன்ற பல நிகழ்ச்சிகள் நடக்கிறது.