Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.10 கோடி கடனுதவி வழங்கல்

மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.10 கோடி கடனுதவி வழங்கல்

மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.10 கோடி கடனுதவி வழங்கல்

மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.10 கோடி கடனுதவி வழங்கல்

ADDED : அக் 01, 2025 02:03 AM


Google News
சேலம்:சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கடனுதவி வழங்கும் விழா, அழகாபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் விவசாயிகள் பெற்ற, 835 கோடி ரூபாய் பயிர் கடன், கூட்டுறவு சங்கங்களில், 483.37 கோடி ரூபாய் நகை கடன், 132.20 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக்குழு கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவின் அதிகபட்ச கடன் தொகை, 20 லட்சத்தில் இருந்து, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, கடந்த நான்கரை ஆண்டுகளில், 741.97 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இன்று, 15 மகளிருக்கு, 45 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்சார ஆட்டோக்கள் வாங்க கடன் உதவி, 8 மாற்றுத்திறனாளிக்கு, 3 லட்சம் ரூபாய் கடன் உதவி, 2 ஆதரவற்ற விதவைகளுக்கு, 1 லட்சம் ரூபாய் கடன், 114 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 10.17 கோடி ரூபாய் என, 10.66 கோடி ரூபாய் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல், மகளிருக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். பயனாளிகள் அனைவரும், அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,'' என்றார்.

கலெக்டர் பிருந்தாதேவி, எம்.பி.,க்கள் செல்வகணபதி, சிவலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் அருள், சதாசிவம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் குழந்தைவேலு, பொது மேலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

'கட்சி ஆரம்பிக்கும்போதே முதல்வர் என்கின்றனர்'

பல்வேறு கட்சிகளை சேர்ந்த, 1,500 பேர், தி.மு.க.,வில் இணையும் விழா, சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியம் சார்பில், இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை, மாரியம்மன் கோவில் அருகே உள்ள வளாகத்தில், நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. வடக்கு ஒன்றிய செயலர் சதீஷ்குமார் தலைமை வகித்தார்.நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு பேசியதாவது: சில பேர் கட்சி ஆரம்பிக்கும்போதே, நாற்காலியை செய்துவிட்டு, 'நான் தான் முதல்வர்' என்கின்றனர். அவர்களுக்கு பதவி தான் முக்கியம். மனிதன் உணவு உண்ண விவசாயி பாடுபடுகிறார். நெசவாளி மானமுடன் வாழ துணியை உற்பத்தி செய்கிறார் என்பதால், முதன் முதலில் கருணாநிதி தான், விவசாயிக்கு இலவச மின்சாரம் வழங்கினார். இன்று விசைத்தறிக்கு, 1,000 யுனிட், கைத்தறிக்கு, 300 யுனிட் மின்சாரம் இலவசமாக அரசு வழங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

'தி.மு.க.,வில் 10,000 பேர்இணைந்துள்ளனர்'

சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், தலைவாசல் அருகே, வீரகனுாரில், மாற்றுக்கட்சியினர், தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது. கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்தார். அதில், அ.தி.மு.க., அ.ம.மு.க., தே.மு.தி.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய, 1,541 பேர், அமைச்சர் வேலு முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். தொடர்ந்து அமைச்சர் வேலு பேசியதாவது: கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி தொகுதிகளில் இன்று(நேற்று) நடந்த விழாக்களில், அ.தி.மு.க.,- தே.மு.தி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து, 10,000 பேர் தி.மு.க.,வில் இணைந்துள்ளனர்,'' என்றார்.

முன்னதாக அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''இன்னும், 20 ஆண்டுக்கு, முதல்வராக ஸ்டாலின் தான் இருப்பார். மக்களுக்கான ஆட்சியாக, தி.மு.க., உள்ளது. கட்சியில் புதிதாக சேர்ந்தவர்கள், தி.மு.க.,வினருடன் இணைந்து பணிபுரிய வேண்டும்,'' என்றார். சேலம் எம்.பி., செல்வகணபதி, தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலர் அழகுவேல், ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us