/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குப்பையால் குளத்தை நாசமாக்கும் நகராட்சி; முதல்வர் பாராட்டிய இளைஞர் கொந்தளிப்புகுப்பையால் குளத்தை நாசமாக்கும் நகராட்சி; முதல்வர் பாராட்டிய இளைஞர் கொந்தளிப்பு
குப்பையால் குளத்தை நாசமாக்கும் நகராட்சி; முதல்வர் பாராட்டிய இளைஞர் கொந்தளிப்பு
குப்பையால் குளத்தை நாசமாக்கும் நகராட்சி; முதல்வர் பாராட்டிய இளைஞர் கொந்தளிப்பு
குப்பையால் குளத்தை நாசமாக்கும் நகராட்சி; முதல்வர் பாராட்டிய இளைஞர் கொந்தளிப்பு
ADDED : மே 20, 2025 01:23 AM

தஞ்சாவூர் : தன்னார்வ அமைப்பால் மீட்கப்பட்ட குளத்தில், மீண்டும் குப்பையை கொட்டி பட்டுக்கோட்டை நகராட்சி பாழ்படுத்தி வருகிறது. இதை குறிப்பிட்டு, முதல்வர் பாராட்டிய தன்னார்வ இளைஞர் வேதனை வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில், புதர் மண்டியிருந்த மங்கம்மா குளத்தை பொதுமக்கள், தன்னார்வலர்கள், மெகா பவுண்டேஷன்ஸ் என்ற நீர்வள பசுமை அமைப்பின் நிமல் ராகவன் உள்ளிட்டோர் சீரமைத்தனர்.
மக்கள் அதிர்ச்சி
ஆக்கிரமிப்பை அளவீடு செய்வதில் பிரச்னை ஏற்பட்டதால், பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, குளத்தில் நகராட்சி நிர்வாகமே குப்பையை கொட்டி வருவதால், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நிமல் ராகவன் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
மங்கம்மா குளத்தை முறையான அனுமதியுடன் சீரமைக்க முடிவு செய்து வேலைகளை துவங்கினோம். ஏற்கனவே, குப்பை மேடாக இருந்த இடத்தை, குப்பை முழுதும் அகற்றிய பின், முழு குளமாக்குவதற்கு முயற்சி செய்தோம்.
இந்த குளம் இருக்கும் இடத்தை அளவீடு செய்து கொடுப்பதில் இருந்த சிக்கல் காரணமாக தற்காலிகமாக வேலையை நிறுத்தி வைத்திருந்தோம். நாங்கள் பணியை துவங்கிய போது எப்படி இருந்ததோ, குப்பையை கொட்டி தற்போது பழைய நிலைக்கு மாற்றி விட்டனர்.
நீர் நிலைகளை மீட்டெடுப்பதற்கு, ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட சிரமங்களையும் தாண்டி, பிச்சை எடுக்காத குறையாக எல்லாவற்றையும் செய்கிறோம். நகராட்சிக்கு என்ன தேவை என புரியவில்லை.
எதற்காக அனுமதி கொடுக்க வேண்டும். மீண்டும் குப்பையை கொட்ட வேண்டும். நகராட்சி அலுவலர்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
வேதனை
நீர்நிலைகள், குப்பை கொட்டும் இடம் என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? நீர்நிலைகளில் குப்பை கொட்ட யார் அதிகாரம் கொடுத்தது? இதற்கு நகராட்சி நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும். இதற்கு யாராவது தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
நிமல்ராகவன் கூறுகையில், ''மங்கம்மா குளத்தை சீரமைக்க துவங்கி, 70 டன் குப்பைகளை அகற்றினோம். ''நீர்நிலைகளை மீட்பதில் முதல்வர் மிகுந்த அக்கறையுடன் உள்ளார். இளைஞர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து நீர்நிலைகளை மீட்டு வருகிறோம். பட்டுக்கோட்டை நகராட்சியின் செயல் வேதனையை ஏற்படுத்திஉள்ளது,'' என்றார்.
'இளம் வயதிலேயே, பொது சிந்தனையுடன் ஏரிகளை சீரமைத்து வரும் நிமல் ராகவனுக்கு பாராட்டுகள்! எடுத்துக்காட்டென செயல்பட்டு இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் அவருக்கு வாழ்த்துகள்' என, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் நிமல்ராகவனை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.