ADDED : ஜூலை 15, 2024 04:41 AM
கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
தேனி: ஜல்லிபட்டி முத்துராம் 31. இவரது மாமனார் பெருமாள். இவருக்கு சொந்தமான நிலம் ஜல்லிபட்டியில் இருந்து சாவடிபட்டி செல்லும் ரோட்டில் உள்ளது. இந்த நிலத்தை பார்க்க முத்துராம், உறவினர் முருகேசன் இணைந்து காரில் சென்றனர். இடம் தொடர்பாக பெருமாளுடன் பிரச்னை உள்ள போது, எதற்காக வந்தீர்கள் என ஜல்லிபட்டி ஒத்தவீடு செழியன், மகன்கள் ஜெகதீஸ், வினோத் இணைந்து மிரட்டினர். தொடர்ந்து இருவரையும் தாக்கி, காரை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். முத்துராம் புகாரில் தென்கரை போலீசார் மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கார் விபத்தில் தொழிலாளிகள் காயம்
தேனி: வடுகபட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெரு சுப்பிரமணி 58, வண்டிமலையன் 38, செல்வராஜ் 28. தேங்காய் வெட்டும் தொழிலாளிகள். கும்பகரை அருகில் வேலை செய்து வீட்டு செல்வராஜ் டூவீலரில் மூவரும் வீட்டிற்கு சென்றனர். நேருநகர் மஞ்சமாதா கோயில் அருகே சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் மூவரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு
தேனி: வடுகபட்டி வள்ளுவர் காலனி பூபதி 42. இவரது கணவர் செல்வக்குமாரிடம், மூணார் விஜயகுமார், இவரது மனைவி பேபிராணி பணம் வாங்கி ஏமாற்றியதாக பெரியகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் ஆஜரான பூபதியை விஜயகுமார், பேபிராணி இணைந்து வழக்கை வாபஸ் வாங்க கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். பூபதி புகாரில் தென்கரை போலீசார் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தகராறு: நால்வர் மீது வழக்கு
தேனி: லட்சுமிபுரம் வெங்கடேசன் 42. இவர் பெரியகுளம் தேனி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஓட்டல் முன் குடிபோதையில் நின்றிருந்த மேலகாமக்காப்பட்டி சதீஸ்குமார், தெய்வேந்திரபுரம் முத்துப்பாண்டி, பிரசன்னா, சச்சின் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசினர். அதனை வெங்கடேசன் கண்டித்தார். அவரையும் அசிங்கமாக பேசினர். வெங்கடேசன் புகாரில் 4 பேர் மீது வழக்கு பதிந்தனர். சதீஷ்குமாரை கைது செய்தனர்.
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
தேனி: கருவேல்நாயக்கன்பட்டி மணிகண்டன் 36. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில் மனைவி ஜெயலட்சுமியை தகாத வார்த்தைகளால் பேசி, மணிகண்டனர் தாக்கினார். மனைவி புகாரில் கணவர் மீது தேனி போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கஞ்சா விற்ற முதாட்டி கைது
தேனி: தேனி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பூமலைக்குண்டு சாவடி அருகே விற்பனைக்காக ரூ.2 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா வைத்திருந்த பொன்னுத்தாய் 72, கைது செய்தனர். அவரிடம் விற்பனைக்கு கஞ்சா வழங்கிய கம்பம் வடக்குபட்டி செல்வியை 61, போலீசார் தேடி வருகின்றனர்.