Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பண்டிகை கால சிறப்பு ரயில் அறிவிக்காததால் பயணிகள் ஏமாற்றம்; போடி - சென்னை ரயிலை தினமும் இயக்க கோரிக்கை

பண்டிகை கால சிறப்பு ரயில் அறிவிக்காததால் பயணிகள் ஏமாற்றம்; போடி - சென்னை ரயிலை தினமும் இயக்க கோரிக்கை

பண்டிகை கால சிறப்பு ரயில் அறிவிக்காததால் பயணிகள் ஏமாற்றம்; போடி - சென்னை ரயிலை தினமும் இயக்க கோரிக்கை

பண்டிகை கால சிறப்பு ரயில் அறிவிக்காததால் பயணிகள் ஏமாற்றம்; போடி - சென்னை ரயிலை தினமும் இயக்க கோரிக்கை

ADDED : செப் 25, 2025 05:00 AM


Google News
Latest Tamil News
தேனி: ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் அல்லது மாவட்டங்கள் வழியாக செல்லும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், தேனி மாவட்டத்திற்கு சிறப்பு ரயில் அறிவிக்காதது மாவட்ட மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கும் போடி - சென்னை ரயிலை தினமும் இயங்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட நறுமணப் பொருட்களை கொண்டு செல்ல சுதந்திரத்திற்கு முன்பே ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதை பல ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டு 2022 முதல் மதுரையில் இருந்து தேனிக்கு ரயில் இயக்கப்பட்டது. பின் 2023ல் போடி ரயில்வே ஸ்டேஷன் பயன்பாட்டிற்கு வந்தது. போடியில் இருந்து தினமும் மாலை மதுரைக்கும், ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பிருந்து மதுரை -போடி வழித்தடம் முழுவதும் மின் மயமாக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகிறது. நுகர்பொருள் வணிக கழகத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுகிறது.

மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் சென்னை, பெங்களூரு, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் வந்து செல்லும் வகையில் சிறப்பு ரயில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பில் இருந்தனர்.

பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டாலும், தேனிக்கு அறிவிக்கப்பட்டாதது மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பயணிகள் கூறுகையில், 'தற்போது போடியில் இருந்து சென்னை செல்லும் அதிவிரைவு ரயிலை தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மூணாறு சுற்றுலா வருபவர்கள், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். மாவட்டத்திற்கு சிறப்பு ரயில் அறிவிக்காவிட்டாலும், தற்போது இயங்கும் போடி சென்னை ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும்.

மேலும் மாணவர்கள், வியாபாரிகள் மதுரை சென்று வரும் வகையில் தினசரி காலையில் மதுரைக்கு ரயில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us