Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ காஞ்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஒரு கவுன்சிலர் கூட வராததால் திருப்பம்

காஞ்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஒரு கவுன்சிலர் கூட வராததால் திருப்பம்

காஞ்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஒரு கவுன்சிலர் கூட வராததால் திருப்பம்

காஞ்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஒரு கவுன்சிலர் கூட வராததால் திருப்பம்

ADDED : ஜூலை 30, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் தி.மு.க., - 33, அ.தி.மு.க., - 9, பா.ம.க., - 2, காங்., - 1, பா.ஜ., - 1, சுயேச்சைகள் - 5 இடங்களில் வெற்றி பெற்றனர். தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி மேயராகவும், கூட்டணியில் இருந்த காங்.,கட்சியைச் சேர்ந்த, 22வது வார்டு கவுன்சிலர் குமரகுருநாதன் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேயர் மகாலட்சுமியின் கணவர் யுவராஜ், தி.மு.க., இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளராக பதவி வகிக்கிறார். காஞ்சி மாநகராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் பணிகளில் ஒரு தரப்பினருக்கே ஆதாயம் கிடைத்து வருவதாக, மேயர் மற்றும் அவரது கணவருக்கு எதிராக, தி.மு.க.,வின் அதிருப்தி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்று, மேயர் மற்றும் அவரது கணவர் மீது புகார் மனு கொடுத்தனர். ஆனால், அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமானவராக யுவராஜ் கருதப்படுவதாகவும், அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க மேலிட நிர்வாகிகள் தயங்குவதாகவும், அதிருப்தியாளர்கள் கொதிப்படைந்தனர்.

இதைத் தொடர்ந்து தி.மு.க., அதிருப்தி அணியினருடன், எதிர்க்கட்சி கவுன்சிலர்களும் கைகோர்த்து, மேயருக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். அதிருப்தி தி.மு.க., கவுன்சிலர்களை அழைத்து, அமைச்சர் நேரு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலர் சுந்தர் ஆகியோர் பல சுற்று பேச்சு நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், மேயரை எப்படியும் பதவியில் இருந்து அகற்ற வேண்டுமென, மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில் தி.மு.க., அதிருப்தியாளர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி, கமிஷனர் செந்தில்முருகனிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து, ஜூலை 29ல் நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இறுதிக்கட்டமாக, தி.மு.க., அமைப்பு செயலர் அன்பகம் கலை, அதிருப்தி கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்தினார். இழுபறி நீடித்த நிலையில், 34வது வார்டின் தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர் பிரவீன்குமார் தவிர, தி.மு.க., கவுன்சிலர்கள் 32 பேரும், அவர்களின் குடும்பத்தோடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தின் மாடியில், நேற்று காலை 10:00 மணிக்கு, கமிஷனர் செந்தில்முருகன் தலைமையில் நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் துவங்கியது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், அதிர்ச்சி திருப்பமாக, தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சி கவுன்சிலர்களும், ஒருவர் கூட கூட்டத்திற்கு வரவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு பின், மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறவில்லை என அறிவித்து, கமிஷனர் செந்தில்முருகன் வெளியேறினார்.

நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் தோல்வி அடைந்ததால், மகாலட்சுமி மேயர் பதவியில் தொடர்கிறார். உள்ளாட்சி விதிகளின்படி, அடுத்த ஓராண்டுக்கு மேயர் மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் நடத்த முடியாது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது மேயர் மற்றும் அவரது ஆதரவு கவுன்சிலர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், அடுத்த சில நாட்களில் நடைபெறவுள்ள மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற குறைந்தபட்சம் 17 கவுன்சிலர்கள் போதும் என்பதால், அவர்களை தொடர்ந்து தங்கள் பக்கம் தக்கவைத்துக் கொள்ள மேயர் தரப்பு தயாராகி வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us