Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆற்று நீரில் மூழ்கும் தரைப்பாலத்திற்கு விமோசனம்!: உயர்மட்ட பாலம் அமைவதால் மக்கள் நிம்மதி

ஆற்று நீரில் மூழ்கும் தரைப்பாலத்திற்கு விமோசனம்!: உயர்மட்ட பாலம் அமைவதால் மக்கள் நிம்மதி

ஆற்று நீரில் மூழ்கும் தரைப்பாலத்திற்கு விமோசனம்!: உயர்மட்ட பாலம் அமைவதால் மக்கள் நிம்மதி

ஆற்று நீரில் மூழ்கும் தரைப்பாலத்திற்கு விமோசனம்!: உயர்மட்ட பாலம் அமைவதால் மக்கள் நிம்மதி

ADDED : ஜூலை 30, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
மீஞ்சூர்: மழைக்காலங்களில் கொசஸ்தலை ஆற்று நீரில் மூழ்கும் தரைப்பாலத்தால், இயல்பு வாழ்க்கை பாதித்து, அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமலும், அவசர உதவிகள் கிடைக்காமலும் தவித்து வந்த கிராம மக்கள், தற்போது உயர்மட்ட பாலம் அமைவதால், நிம்மதி அடைந்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பாரெட்டிப்பாளையம், பள்ளிபுரம், வேப்பம்கொண்ட ரெட்டிபாளையம் ஆகிய கிராமங்களில், 2,240 குடியிருப்புகளில், 9,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

இங்குள்ளவர்கள் கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு, திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலை - பள்ளிபுரம் கிராமம் ஆகியவற்றிற்கு இடையே, கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்த பாலம், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, பராமரிப்பு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கிவிடுகிறது.

தரைப்பாலத்தின் மீது, 6 அடி உயரத்திற்கு மழைநீர் செல்வதால், இந்த கிராமவாசிகளின் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கிறது.

மேலும், கிராமங்களின் மறுபகுதியிலும், இதே ஆற்றின் கிளை ஒன்று பயணிக்கிறது. அதிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மாற்று வழித்தடங்களிலும் பயணிக்க முடியாத நிலையில், கிராமங்கள் தீவாக மாறுகின்றன.

தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் ஆற்று நீர் குறைவதற்கு, ஒரு மாதம் ஆகும் நிலையில், கிராமவாசிகள் வேறுவழியின்றி ஆபத்தான படகு பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

மீஞ்சூர் ஒன்றியத்தின் வாயிலாக, நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், 16.50 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பாலம், 10 துாண்களின் மீது, 200 மீ., நீளம், 10 மீ., அகலத்தில் ஓடுபாதையுடன் அமைகிறது.

சோதனை பில்லர் அமைத்து, அதன் மீது பாறை கற்கள் அடுக்கி வைத்து சுமைதாங்கும் பரிசோதனை முடிக்கப்பட்டன. அதை தொடர்ந்து, மற்ற இடங்களில் பில்லர்கள் அமைக்கப்பட்டன.

தற்போது பில்லர்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்து, அதன் மீது ஓடுபாதைக்கான கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். உயர்மட்ட பாலம் அமைவதன் வாயிலாக, ஆண்டுதோறும் தவிப்பிற்கு உள்ளாகும் சுப்பாரெட்டிப்பாளையம், பள்ளிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்க உள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:

மழைக்காலங்களில் ஆற்று தரைப்பாலம் மூழ்குவதால், பெரும் பாதிப்பிற்கு ஆளாகி வருகிறோம். குறிப்பாக, விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கிறது.

தேவையான இடுபொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், உரிய நேரத்தில் பயிர்களுக்கு பயன்படுத்த முடியாமல் அவற்றின் வளர்ச்சி பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. தற்போது பாலம் அமைவது, கிராம மக்களுக்கும், விவசாயத்திற்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us