ADDED : செப் 23, 2025 10:33 PM
திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் அருகே மினி டேங்க் சுவிட்சை ஆப் செய்தபோது, மின்சாரம் பாய்ந்து பெண் படுகாயம் அடைந்தார்.
திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமாபுரம் கிராமத்தில், 100க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 2,000 லிட்டர் மினி டேங்க் அமைத்து, மின்மோட்டார் மூலம் ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் வினியோகம் செய்து வருகிறது.
நேற்று காலை அதே பகுதியில் வசிக்கும் வனிதாமேரி, 36, என்பவர், மினி டேங்க் அருகே துணி துவைத்துவிட்டு, மின் மோட்டாரை நிறுத்த முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.