ADDED : செப் 17, 2025 03:13 AM
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், காசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் டெய்லர் ஆதிமூலம், 64. இவரது மனைவி வெங்கடேஸ்வரி, 54. தம்பதியின் மகன் வெற்றிச் செல்வன், 32. இவர், சென்னையில் ஆடிட்டரின் உதவியாளராக பணிபுரிகிறார்.
ஆதிமூலத்திற்கு சென்னையில் சொந்த வீடு உள்ளது. வீட்டை விற்று பணம் தரக்கோரி, ஆதிமூலத்திடம் 2023ல் தகராறில் ஈடுபட்ட வெற்றிச்செல்வன் கத்திரிகோலால், தந்தையை 14 இடங்களில் குத்தினார். உயிர் தப்பிய ஆதிமூலம், மனைவியுடன் ப.உ.ச., நகரில் மற்றொரு வீட்டில் வசித்தார்.
நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற வெற்றிச்செல்வன், பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார். பயந்துபோன ஆதிமூலம் அங்கிருந்து, காசிநாயக்கன்பட்டியில் உள்ள மற்றொரு வீட்டிற்கு சென்றார்.
அங்கு வந்த வெற்றிச்செல்வன், வீட்டில் தனியாக இருந்த வெங்கடேஸ்வரியை, இரும்பு ராடால் அடித்து கொன்று விட்டு தப்பினார். வெற்றிச்செல்வனை திருப்பத்துார் தாலுகா போலீசார் தேடுகின்றனர்.