ADDED : ஜூன் 30, 2024 01:10 AM
திருப்பூர், திருப்பூர் மாநகராட்சிக்கென தனி மொபைல் செயலி துவங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில், 60 வார்டுகளில், 13 லட்சம் பேர் வசிக்கின்றனர். மாநகராட்சி சார்பில் நகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடிப்படையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு சேவைகளும் வழங்கப்படுகிறது.
மாநகராட்சி குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் வழங்கும் சேவைகளை மக்கள் பயன்படுத்தும் வகையில் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'நம்ம திருப்பூர்'(Namma Tiruppur) என்ற பெயரில் ஆன்ட்ராய்டு அடிப்படையிலான மொபைல் செயலி இது.
இதில், திருப்பூர் மாநகராட்சியின் விவரங்களை குடியிருப்போர் அறிந்து கொள்ளவும், தங்களுக்கான சேவைகளை எளிதாகப் பெறவும் 'ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்' ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி தொடர்பான குறைகளையும் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செயலியை பதிவிறக்கம் செய்தால் 'TCMC' என்ற மென்பொருள் தோன்றும். முதல் முறை பயன்படுத்தும் போது, 'ரிஜிஸ்டர்' பட்டனை உபயோகித்து சுய விவரங்களை பதிவிட வேண்டும். உபயோகிப்பாளர் பெயர், வயது, மொபைல் போன் எண் விவரங்களை பதிவிட வேண்டும். முகவரி விவரங்கள் விருப்பப்படி பதிவு செய்யலாம். பதிவு செய்த பின் மொபைல்போனுக்கு வரும் ஓ.டி.பி., உபயோகித்து உள்ளே நுழையலாம்.
இதில் மக்கள் பிரதிநிதிகளின் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்கள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் விவரம் உள்ள பகுதியில் அவர்களின் தொடர்பு எண்கள், அலுவலக தொடர்பு எண்கள் இடம் பெறவில்லை என்ற குறை உள்ளது. அதே போல் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சில அலுவலர்களின் பெயர்களும் அப்டேட் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.