ADDED : ஜூலை 14, 2024 11:25 PM
திருப்பூர்:தாராபுரம், அலங்கியத்தை சேர்ந்தவர் ஷர்புநிஷா, 21; கல்லுாரி படிப்பு முடித்து விட்டு, எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வந்தார்.
மற்றொரு கடையில் வேலை செய்து வந்த ஸ்ரீதர், 24 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆறு மாதங்களாக காதலித்து வந்தனர். காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. ஸ்ரீதரின் தந்தை திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார். இதை ஸ்ரீதர், ஷர்புநிஷாவுக்கு தெரிவித்தார்.
மனமுடைந்த ஷர்புனிஷா, கடந்த 12ம் தேதி வீட்டில் குளிர்பானத்தில் மாத்திரையை கலந்து குடித்ததில் பலியானார். அலங்கியம் போலீசார் வழக்கு பதிந்து, திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதால் ஷர்புனிஷா தற்கொலை செய்துகொண்டதால், தற்கொலைக்கு துாண்டியதாக ஸ்ரீதரை கைது செய்தனர்.
---
கூடுதல் பஸ்கள் தேவை
பல்லடம், ஜூலை 14--
பல்லடம்- - பொள்ளாச்சி வழித்தடத்தில், காமநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, காட்டம்பட்டி, சந்திராபுரம்; பல்லடம் - -உடுமலை வழித்தடத்தில், சித்தம்பலம், கேத்தனுார், மந்திரிபாளையம் குள்ளம்பாளையம், வாவிபாளையம், ஜல்லிப்பட்டி, செஞ்சேரிப்புத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் இருந்து, ஏராளமான தொழிலாளர்கள், தினசரி, திருப்பூர், பல்லடம் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள பனியன் உள்ளிட்ட நிறுவனங் களுக்கு வேலைக்கு செல்கின்றனர். கோவை, திருப்பூர் பகுதிகளில் உள்ள கல்லுாரிகளுக்கும் எண்ணற்ற மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். தினசரி இவ்வழித்தடங்களில் இயங்கும் பெரும்பாலான அரசு - தனியார் பஸ்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் நிரம்பி வழிந்தே செல்கின்றன.
பொதுமக்கள் கூறுகையில், ''காலை மற்றும் மாலை நேரங்களில், பெரும்பாலான பஸ்கள் கிராமங்களில் நிற்காமல் செல்கின்றன. வேலைக்குச் செல்பவர்கள், மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். சிலர், டூவீலர்களிலேயே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. இரண்டு வழித்தடங்களிலும், கூடுதல் பஸ்களை இயக்குவதுடன், வழித்தட கிராமங்களில் நின்று செல்ல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
---
கண் சிகிச்சை முகாம்
திருப்பூர்:
கருவலுாரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம், இன்னர்வீல் அவிநாசி கிழக்கு, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சத்யபாமா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் முருகன், துணைத்தலைவர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க திட்ட தலைவர் விசித்ரா, தலைவர் பிரகாஷ், செயலாளர் சரவணன், பொருளாளர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முறியாண்டம்பாளையம் ஊராட்சித் தலைவர் ரவிக்குமார் நன்றி கூறினார்.
---
அரசு அச்சகம் இடம் தேர்வு தீவிரம்
திருப்பூர், ஜூலை 15-
தமிழக எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும் எட்டு அரசு அச்சகங்கள் இயங்குகின்றன.
இந்த அச்சகங்களில், அனைத்து அரசு துறை சார்ந்த பல்வேறு படிவங்கள், அறிக்கைகள், பதிவேடுகள், தேர்தல் படிவங்கள், பதிவேடு, கையேடுகள், ஓட்டுச்சீட்டு, கருவூல படிவங்கள் அச்சிடப்படுகின்றன.
திருப்பூரிலும் அரசு அச்சக கிளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை கமிஷனர் ஷோபனா நேற்று திருப்பூருக்கு வந்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அச்சுத்துறை கமிஷனர் ஆகியோர், அரசு அச்சகம் அமைப்பதற்காக பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.
புஷ்பா ரவுண்டானா அருகே கூட்டுறவு பண்டக சாலைக்கு சொந்தமான கட்டடம், குமார் நகரில் காதிகிராப்டுக்கு சொந்தமான கட்டடம்; மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம் ஆகிய பகுதிகளை அச்சுத்துறை கமிஷனர் பார்வையிட்டு சென்றுள்ளார்.
---
கால்நடை மருந்தகம் அமையுமா
பல்லடம், ஜூலை 15-
பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி கிராமத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய் பாதிப்புகள், தடுப்பூசி போடுதல், பிரசவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, விவசாயிகள், அரசு கால்நடை மருந்தகத்தை நாடுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: பணிக்கம்பட்டி கிராமத்தில் அரசு கால்நடை மருந்தகம் வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தமிழக அரசு, கால்நடை துறை அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்காலிக கால்நடை மருந்தகம் அமைப்பதற்காக கோவில் கட்டடத்தையும் வழங்க ஊர் மக்கள் தயாராக உள்ளனர். கால்நடை துறை, அமைச்சர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்துக்கு ஏற்கனவே தெரியப்படுத்தி உள்ளோம். தற்போது 7 கி.மீ., தொலைவில் உள்ள செம்மிபாளையம் மருந்தகம் செல்ல வேண்டி உள்ளது. நேர விரயம், பொருட்செலவு ஏற்படுகிறது. கால்நடை மருந்தகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
----
பஸ் வழித்தட விவரம் இல்லையே!
திருப்பூர், ஜூலை 15-
திருப்பூர் மண்டலத்தில் இருந்து, 123 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெருமாநல்லுார், அவிநாசி, குன்னத்துார், நம்பியூர், காங்கயம், கொடுவாய், மங்கலம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
டவுன் பஸ்கள் பல பயணிகள் வசதிக்கு ஏற்ப, புதிய பஸ்களாக மாற்றப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் இயங்கும் டவுன்பஸ்கள், எந்த பகுதியில் இருந்து, எங்கு பஸ் பயணிக்கிறது என்ற விரிவான அறிவிப்பு பலகை, ஸ்டிக்கர் பின்புற கண்ணாடியில் இல்லை.
பஸ் எண் 8ல் திருப்பூரில் இருந்து செங்கப்பள்ளி என குறிப்பிடப்பட்டுள்ளது; எந்த வழியாக செல்கிறது, எந்தெந்த ஸ்டாப்பில் நிற்கும் என ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் அறிவிப்பு வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வெளுத்து போய் விட்டது. '7/99' பஸ்சில் பின்புற ஸ்டிக்கர் விழுந்து விட்டது.
இது போன்ற பஸ்களால், பயணிகள் பஸ்சில் ஏறும் முன் விபரங்களை அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்டிலும், பஸ் ஸ்டாப்பிலும் பஸ் முன்பக்க கண்ணாடியை போய் பார்த்து, அதன் பின் பஸ் ஏற வேண்டியுள்ளது. வழித்தட விபரம், நின்று செல்லும் ஸ்டாப் குறித்து தகவல்களை ஸ்டிக்கராக பஸ்களில் ஒட்ட வேண்டும்.
---
கலெக்டர் திடீர் ஆய்வு
திருப்பூர்:
தாராபுரம் தாலுகா, சின்னக்காம்பாளையத்தில் செயல்படும் கோழிப்பண்ணையால் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாகவும்; கோழிப்பண்ணையை அகற்றக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் கடந்த 8ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு, கருப்பு நிற பூச்சிகளை பாட்டிலில் அடைத்து எடுத்துவந்தனர். கோழிப்பண்ணையிலிருந்து உருவாகி, குடியிருப்பு பகுதி முழுவதும் பரவும் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படுவதாக மனு அளித்தனர்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அதிகாரிகள் குழுவினர், நேற்றுமுன்தினம் சின்னக்காம்பாளையம் சென்றனர். கோழிப்பண்ணைகளுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர். கருப்பு நிற பூச்சிகள் பரவுவதை ஆய்வு செய்த கலெக்டர், பூச்சிகளை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு உறுதியளித்தார்.
----
சீரமைப்பு ஒருபுறம்; சீரழிவு மறுபுறம்
திருப்பூர், ஜூலை 15-நொய்யல் ஆறு சீரமைப்பு பணிகள், ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபுறமோ சீரழிக்கும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
திருப்பூரில், நொய்யல் நதிக்கரையை மேம்படுத்தும் வகையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிட்டு பணி நடைபெற்று வருகிறது. ஆற்றின் இரு கரைகளிலும் அணைமேடு முதல் மணியகாரம்பாளையம் பாலம் வரையில், கான்கிரீட் சாய்வு தளம் அமைத்து கரையைப் பலப்படுத்துதல்; கரையை ஒட்டி இரு புறங்களிலும் ரோடு அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. ஆற்றின் கரையில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறத்தில் நொய்யலை சீரழிக்கும் விதமான நடவடிக்கைகளும் நடந்து வருகிறது.அணைக்காடு பகுதியில், எம்.ஜி.ஆர்., நகர் வழியாக நொய்யல் கடந்து செல்கிறது. இந்த பகுதியில் அதன் கரையோரத்தில், கட்டட கழிவுகள் லோடு லோடாகக் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன.கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்கள், இவற்றை இங்கு கொண்டு வந்து கொட்டிச் செல்வது வாடிக்கையாக மாறி வருகிறது. இதனால், நீர் நிலை மாசுபடும் அபாயம் உள்ளது. இப்பகுதியைக் கடந்து செல்வோரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.நீர் நிலைகளின் கரையில் இதுபோல் கழிவுகள் கொண்டு வந்து கொட்டி, அதை மாசுபடுத்தும் செயல்கள் தடுக்கப்பட வேண்டும்.
---
தேசிய நல்லாசிரியர் விருது
விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூர்:
முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் (செப்., 5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது பெற அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. nationalawardsto teachers.education.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களை முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான மாவட்டக்குழு தேர்வு செய்து, மாநிலக்குழுவுக்கு பரிந்துரைக்கும்.
---
மனுவுக்கு பதிலளித்தால் மட்டும் போதுமா?
திருப்பூர், ஜூலை 15-
''மனுவுக்கு பதிலளித்தால் மட்டும் போதாது; பாண்டியன் நகர் அரசு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செய்துகொடுக்கவேண்டும்'' என்பது பெற்றோர்களின் கோரிக்கை.
திருப்பூர் மாநகராட்சி 2வது வார்டுக்கு உட்பட்ட பாண்டியன் நகரில், அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில், போதிய குடிநீர் வசதி இல்லை; கழிப்பிடங்கள், பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதான், மாணவர்களும், ஆசிரியர்களும் தவிக்கின்றனர். காரைகள் முழுமையாக பெயர்ந்து எந்நேரம் வேண்டுமானாலும் விழும் ஆபத்தான நிலையில் இப்பள்ளி சுற்றுச்சுவர் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார்.
பாண்டியன் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்துள்ள சுற்றுச்சுவர் மற்றும் பயன்படாத நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி, மாணவ, மாணவியர் பயன்பாட்டுக்கு 10 கழிப்பிடங்கள் கட்டித்தரக்கோரி, தலைமை ஆசிரியரிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. பள்ளி கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நிதி ஒதுக்கீட்டில், பாண்டியன் நகர் அரசு உயர்நிலை பள்ளிக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என, சமூக ஆர்வலருக்கு, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட மனுவுக்கு பதில் அளித்தாகிவிட்டது என அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடாது. பாண்டியன் நகர் பள்ளிக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகளை விரைந்து செய்துகொடுக்கவேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள சுற்றுச்சுவரை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு, புதிய சுவர் கட்டுமான பணிகளை விரைந்து துவக்கவேண்டும்; மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த விஷயத்தில் அதிகாரிகள் அசட்டையாக செயல்படக்கூடாது என்பது பெற்றோரின் கோரிக்கை.
---
ரவுடிகள் மீது இரும்புக்கரம்
திருப்பூர், ஜூலை 15-
திருப்பூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில், ரவுடி பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதில் இடம்பெற்றுள்ள, 570 பேரை போலீசார் கண்காணித்து வருகின்றனர். 'அடங்கியிருக்க வேண்டும்; இல்லாவிட்டால், அடக்கப்படுவீர்கள்; சிறையில் அடைக்கப்படுவீர்கள்' என்று ரவுடிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. காவல் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடுகளில் இடம் பெற்றுள்ள ரவுடிகளின் தற்போதைய நிலை, எங்கு உள்ளனர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்து கண்காணிக்கடி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் மாநகரம் மற்றும் மாவட்ட போலீசார் கடந்த சில நாட்களாக ரவுடிகள் விபரங்களுடன் பட்டியலை தயார் செய்துள்ளனர்.
இரு கொலைகளுக்கு மேல், தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு 'தாதா'க்கள் போல செயல்படும் ரவுடிகள் 'ஏ - பிளஸ்' பிரிவிலும், அவர்களுக்கு கீழே உள்ள ரவுடி கும்பலுக்கு தலைமை தாங்கும் ரவுடிகள் 'ஏ' பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர். சிறிய குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் 'பி' மற்றும் 'சி' பிரிவு என வகைப்படுத்தப்பட்டு தயார் செய்தனர்.
மாநகரில், 225;புறநகரில், 345
மாநகரில், 'ஏ பிளஸ்' பிரிவில், 2 பேரும், 'ஏ' பிரிவில், 8 பேரும் என, பத்து பேர் முக்கியமான ரவுடிகள், 'பி' பிரிவில், 9 பேர் மற்றும் 'சி' பிரிவில், 206 பேர் என மொத்தம், 225 பேர் அடையாளப்படுத்தப்பட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
புறநகரில், 'ஏ பிளஸ்' பிரிவில் ஒருவர், 'ஏ' பிரிவில், நான்கு பேர் மற்றும் 'சி' பிரிவில், 340 பேர் என மொத்தம், 345 பேர் இடம் பெற்றுள்ளனர். மாநகர் மற்றும் புறநகர் என, மாவட்டம் முழுவதும், 570 ரவுடிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் இருந்து வெளியே வந்து தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் நடக்கும் ரவுடிகளை, 110 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரவுடிகளை கமிஷனர், சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ., முன் ஆஜர்படுத்தப்பட்டும்; கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தும் வருகின்றனர்.
'பெட்டிப்பாம்பாய் அடங்கியிருக்க வேண்டும்; இல்லாவிட்டால், அடக்கப்படுவீர்கள்' என்று ரவுடிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
எஸ்.ஐ., தலைமையில் தனிப்படை
போலீசார் கூறியதாவது:
மாவட்டம் முழுவதும் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள, 570 பேரின் தற்போதைய நிலை குறித்து தெரிந்து, அதற்கு தகுந்தாற்போல் போலீசார் கண்காணித்து வருகின்றனர். 'ஏ பிளஸ்' மற்றும் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள முக்கிய ரவுடிகளை எஸ்.ஐ., தலைமையிலான தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து கைது நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.
----
திருப்பதிகங்கள் முற்றோதல்
அவிநாசி, ஜூலை 15-
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள, ஸ்ரீ கருணாம்பிகை கலையரங்கத்தில் தேவார திருப்பதிகங்கள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
திருஞானசம்பந்தர், திருவிற்கோலம் தலத்தில் அருளிய 321வது பதிகத்தில் இருந்து திருநல்லுார்ப்பெருமணத்தில் அருளிய 385வது திருப்பதிகம் வரை கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் பண்ணிசை மரபோடு முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள், மனமுருகியபடி லயித்தனர்.
முன்னதாக லிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் மண்டபத்தில் திருமுறை கண்ட பிள்ளையார் மற்றும் நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. திருஞானசம்பந்த சுவாமிகள், கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியை கோவை அரண் பணி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
---
தக்காளி விலை உயர வாய்ப்பு
திருப்பூர், ஜூலை 15-
வரத்து சரிந்தால், வரும் நாட்களில், தக்காளி விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
திருப்பூர் மார்க்கெட்களில், ஜூன் மாத இறுதியில் ஒரு கிலோ தக்காளி, 70 முதல், 85 ரூபாய்க்கு விற்கப்பட்டது. விலை உயர்வால், தக்காளி விவசாயிகளுக்கு லாபம் கிடைத்ததால், மகிழ்ச்சி அடைந்தனர்.
வெளிமாநில மொத்த வியாபாரிகள், மைசூரு, மாண்டியா உள்ளிட்ட கர்நாடகாவில் இருந்து லாரிகளில் டன் கணக்கில் தக்காளியை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரே வாரத்தில் கிலோவுக்கு, பத்து ரூபாய் விலை குறைந்தது. இதற்கிடையே சரிந்திருந்த உள்ளூர் தக்காளி வரத்து இயல்புக்கு திரும்பியது.
உழவர் சந்தையில் கிலோ, 45 ரூபாய்க்கு தக்காளி விற்பனையானது. ரோட்டோரம், இரண்டரை கிலோ, 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை, குளிர்காற்று, லேசான துாறல் மழையால் தக்காளி வரத்து மீண்டும் மெல்ல குறைய துவங்கியது. ஆந்திரா, கர்நாடகா உட்பட வடமாநிலங்களில் மழை பெய்து வருவதால், அங்கிருந்தும் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு முகூர்த்த தினம் இல்லை என்பதால், நேற்றைய வரத்துக்கு ஏற்ப நிலை சமாளிக்கப்பட்டது. மொத்த விலையில், கிலோ, 40 ரூபாய்க்கும், சில்லறையில் கிலோ, 45 ரூபாய்க்கும் தக்காளி விற்றது. வரும் நாட்களில் வரத்து குறைந்தால், தக்காளி விலை உயர வாய்ப்புள்ளது என்கின்றனர், வியாபாரிகள்.
---
நடமாடும் கழிவறைகள்
திருப்பூர், ஜூலை 15-
மாநகராட்சி எல்லைக்குள் மொபைல் டாய்லெட் வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் வாடகை அடிப்படையில் வழங்குகிறது.
திருப்பூர் மாநகர பகுதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப் படுகிறது. கோவில் திருவிழாக்கள், கண்காட்சிகள், பொருட்காட்சிகள், விற்பனை மேளாக்கள் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. அரங்கம், மண்டபம் போன்ற இடங்களில் நடத்தப்படும் போது, அங்கு வருவோருக்கு கழிப்பிட வசதிகள் இருக்கும். வெளியிடங்கள், கழிப்பிட வசதி இல்லாத இடங்களில் நடக்கும்போது, இது பெரும் அவதியை ஏற்படுத்தும்.
இதற்கு தீர்வு காணும் விதமாக, மாநகராட்சி சார்பில் 4 மொபைல் டாய்லட் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தலா 10 கழிவறைகள் கொண்ட இந்த வாகனங்கள், நிகழ்ச்சி நடத்தும் அமைப்புகளுக்கு வாடகைக்கு விடப்படவுள்ளது. நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வாடகை என்ற அடிப்படையில் இதைப் பெற்றுப் பயன்படுத்தலாம் என மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 155304 மற்றும் 0421 232 1500 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
---
முறைகேடு மின் இணைப்புகள் துண்டிப்பு
திருப்பூர், ஜூலை 15-
திருப்பூரில், தற்காலிக மின் இணைப்பில் விதிமீறல் கண்டறியப்பட்டதால், முறைகேடான இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன.
திருப்பூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட, திருப்பூர் மின் கோட்டத்தில், தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக, பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டது. கலெக்டர் உத்தரவுப்படி, மின்வாரிய அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். முறைகேடாக தற்காலிக மின் இணைப்பு வழங்குவது கண்டறியப்பட்டு, பிரிட்ஜ்வே காலனி உட்பட, பல்வேறு இடங்களில், 10க்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சிறிய அளவிலான வீடு கட்டும் பணிகளுக்கு மட்டும், குறைவான டிபாசிட் தொகைக்கு தற்காலிகமாக இணைப்பு வழங்கப்படுகிறது; இதர இணைப்புகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான டிபாசிட் செலுத்த வேண்டும்.
கட்டுமான பணி துவங்கும் முன், வீடு கட்டுவதாக கூறி, தற்காலிக மின் இணைப்பு பெற்று முறைகேடு செய்து வருவதாகவும், திருப்பூர் கோட்டத்தில் மட்டம், 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மின்வாரிய அலுவலர்கள் நடத்திய கள ஆய்வில், புகார் தெரிவித்திருந்தபடி, முறைகேடாக தற்காலிக இணைப்பு வழங்கியது தெரியவந்துள்ளது. அதன்படி, பல்வேறு இடங்களில், 10 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
--
அரசு பள்ளிகளில் வசதி
முதல் கட்ட நிதி விடுவிப்பு
திருப்பூர், ஜூலை 15-
மத்திய கல்வி அமைச்சகம் மூலம் ஒவ்வொரு கல்வியாண்டும் அரசு பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த மானியத்தொகை விடுவிக்கப்படும். மாநிலம் முழுதும் உள்ள, 37 ஆயிரத்து, 471 அரசு பள்ளிகளுக்கு வழங்குவதற்கு, 61 கோடி ரூபாய் நிதி கடந்த வாரம் விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில், பள்ளி கல்வித்துறை மாநில திட்ட இயக்குனரகம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இத்தொகை பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட கல்வித்துறை, 17 வட்டாரங்களை கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுதும் உள்ள, 1,331 அரசு பள்ளிகளின் வளர்ச்சி பணிகளுக்கு முதல்கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தொகை யை கொண்டு அரசு பள்ளிகளில் தனியாக கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர் வசதி, துாய்மை பணி, பள்ளி உபகரணங்கள் வாங்குதல், கட்டட பராமரிப்பு பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் உள்ள சூழலுக்கு ஏற்ப ஒரு பள்ளிக்கு பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்க வேண்டும்.
நிதியை பெறும் பள்ளி கள், பணிகள் நடப்பது குறித்தும், பணி முடிவுற்ற பின், அவ்விபரங்களை முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
----
30 அமைச்சர்களுக்கு என்ன வேலை?
ஹிந்து முன்னணி பாய்ச்சல்
பல்லடம், ஜூலை 15--
''ஒரு சட்டசபை தொகுதியில், 30 அமைச்சர் களுக்கு என்ன வேலை?'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், ராயர்பாளையத்தில் நடந்த, ஹிந்து முன்னணி ஊழியர் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடந்து வருகிறது. ஹிந்துக்களை இழிவுபடுத்துபவர்களைத்தான் நாம் மீண்டும் ஆட்சியில் அமர வைக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.
ஒரு சட்டசபை தொகுதியில்(விக்கிரவாண்டி), 30 அமைச்சர்களுக்கு என்ன வேலை? கோடிக்கணக்கில் செலவழித்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ., சும்மாவா இருக்கப் போகிறார்? தேர்தலில் செலவு செய்த பணத்துக்காக மீண்டும் வருமானம் ஈட்டத்தான் பார்ப்பார். மக்கள் சரியானவர்களை தேர்ந்தெடுக்க அவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டியது ஹிந்து முன்னணியின் பொறுப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
-----
மாமரத்துக்கு மறுவாழ்வு
திருப்பூர், ஜூலை 15-
வடிகால் பணிக்காக வெட்ட வேண்டிய மாமரத்தை, வேருடன் பெயர்த்து எடுத்து, மறுநடவு செய்த கணக்கம்பாளையம் ஊராட்சியை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது ரத்னா நகர்; அப்பகுதியில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தார்ரோடும், மூன்று லட்சம் ரூபாயில் வடிகால் பணியும் நடக்க உள்ளது. ரோடு அமைக்க, நிலத்தை அளவீடு செய்த போது, தனியார் ஒருவர் வளர்த்த மாமரம் இடையூறாக இருந்தது.
எட்டு ஆண்டுகளாக வளர்த்து, காய்பிடிக்கும் பருவம் என்பதால், மரத்தை வெட்ட வேண்டாமென, ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அருகே உள்ள 'ரிசர்வ்' சைட்டில், குழி தோண்டி, மரத்தை வேருடன் பெயர்த்து எடுத்து மறுநடவு செய்துள்ளது.
வேலை உறுதி திட்ட பணியாளர் மூலம், மரம் தழைக்கும் வரை தண்ணீர்விட்டு பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் மரம் பாதுகாப்பு நடவடிக்கையை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
----
நீர்நிலைகளில் பாயும் சாய ஆலைக்கழிவுகள்
திருப்பூர், ஜூலை 15-
திருப்பூரில் அனுமதி பெறாத சாய ஆலைகள் மட்டுமின்றி, சில நேரங்களில், அனுமதி பெற்ற ஆலைகளும் கூட, சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை திறந்துவிட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிடுகின்றன.
கள்ளிக்காடு தோட்டம், கே.வி.ஆர்., நகர் பகுதிகளில் ஏராளமான சாய ஆலைகள் இயங்குகின்றன. இவற்றில் சில ஆலைகள், சந்தர்ப்பம் பார்த்து, சாயக்கழிவுநீரை ஜம்மனை ஓடையில் திறந்துவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. ஜம்மனை ஓடையில் அவ்வப்போது, வெவ்வேறு வண்ணங்களில் சாயக்கழிவுநீர் ஓடுவதை காணமுடிகிறது.
வேலை நாட்களிலேயே நீர் நிலைகளை எட்டிப்பார்க்காத மாசுகட்டுப்பாடு அதிகாரிகள், விடுமுறை நாளிலா வந்துவிடப்போகிறார்கள் என்ற எண்ணத்தில், சனி, ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாட்களில், நீர் நிலைகளில் சாயக்கழிவுநீரை திறந்துவிடுவது தொடர் நிழ்வாகிறது.
நேற்று காலை ஜம்மனையில் திறந்துவிடப்பட்ட இளஞ்சிவப்பு நிற சாயக்கழிவுநீர், தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட் பகுதி வழியாக பாய்ந்தோடி, மாநகராட்சி அலுவலகம் பின்புறம், நொய்யலாற்றில் சென்று சேர்ந்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை வேதனைக்குள்ளாக்கியது.
மாசுகட்டுப்பாடு வாரியம், மின்வாரியம், வருவாய்த்துறை, மாநகராட்சி உள்பட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக்குழுவும் சரிவரச் செயல்படுவதில்லை.
மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை அளித்தால், முறைகேடு ஆலைகளின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிடுவதோடு கடமையை முடித்துக்கொள்கிறது, ஒருங்கிணைப்புக்குழு.
சாட்டையை சுழற்றுவாரா கலெக்டர்?
பின்னலாடை தொழில் வளர்ச்சியில் உலகையே திரும்பிப்பார்க்கச்செய்துவரும் நிலையில், சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது, திருப்பூரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிடும். இளைய தலைமுறையினருக்கு, துாய்மையான சுற்றுச்சூழலை வழங்கமுடியாமல் போய்விடும்.
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை திறம்பட செயல்படச்செய்து, கலெக்டர் சாட்டையை சுழற்றவேண்டும்.
---
மீன் வரத்து அதிகரிப்பு
விற்பனையும் அமோகம்
திருப்பூர், ஜூலை 15-
தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு, கேரளா மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் இருந்து நேற்று மீன் வரத்து அதிகரித்தது.
ஒரே நாளில், 37 டன் கடல் மீன் வந்து குவிந்ததால், மீன் விலை குறைந்தது. நேற்று, கடல் மத்தி, 180, அணை மத்தி, 90, சங்கரா, 250, வஞ்சிரம், 550, கடல் பாறை, 450, டேம் பாறை, 160, நண்டு முதல் ரகம், 450, இரண்டாம் ரகம், 320, விளாமீன், 480, படையப்பா, 350 ரூபாய்க்கு விற்றது.
மீன் ரகங்கள் விலை, 50 முதல், 80 ரூபாய் வரை குறைந்ததால், அதிகளவில் மீன்களை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர். சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விசேஷங்களால் கடந்த வாரங்களில் மீன் விலை குறைந்த போதும், வாடிக்கையாளர் குறைவாக வந்தனர். ஆனால், நேற்று அதிகளவில் மீன் வந்ததோடு, விற்பனையும் சுறுசுறுப்பாக நடந்ததால், மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.