/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோழிப்பண்ணைக்காக குடிநீரை உறிஞ்சுவதா? அலகுமலை மக்கள் கலெக்டரிடம் புகார் கோழிப்பண்ணைக்காக குடிநீரை உறிஞ்சுவதா? அலகுமலை மக்கள் கலெக்டரிடம் புகார்
கோழிப்பண்ணைக்காக குடிநீரை உறிஞ்சுவதா? அலகுமலை மக்கள் கலெக்டரிடம் புகார்
கோழிப்பண்ணைக்காக குடிநீரை உறிஞ்சுவதா? அலகுமலை மக்கள் கலெக்டரிடம் புகார்
கோழிப்பண்ணைக்காக குடிநீரை உறிஞ்சுவதா? அலகுமலை மக்கள் கலெக்டரிடம் புகார்
ADDED : ஜூலை 27, 2024 12:07 AM

திருப்பூர்;பொங்கலுார் ஒன்றியம், அலகுமலை ஊராட்சி பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டுவந்தனர்.
இரண்டாவது தளத்தில் உள்ள அரங்கில், விவசாயிகள் குறைகேட்புக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. மக்களை தடுத்துநிறுத்திய போலீசார், ஐந்துபேரை மட்டும் அரங்கினுள் அனுமதித்தனர்; கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து, குடிநீர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
அதன்பின், அலகுமலை பொதுமக்கள் கூறியதாவது:
ராமம்பாளையம், குளத்துவழியில், பி.ஏ.பி., கால்வாய்க்கு அருகே ஆழ்துளை கிணறு அமைத்து, அலகுமலை ஊராட்சி பகுதிகளுக்கு தேவையான குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு கோழிப்பண்ணை உரிமையாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆகியோர், பி.ஏ.பி., கால்வாயிலிருந்து 110 மீட்டர் துாரத்துக்குள் இரண்டு போர்வெல் அமைத்துள்ளனர்.
விவசாய மின் இணைப்பு பெற்று, ஏழு கிலோமீட்டர் துாரம் பைப் லைனில், கோழிப்பண்ணை மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் எடுத்துச்செல்கின்றனர். அலகுமலை ஊராட்சியின் போர்வெல்லுக்கு அருகாமையில், தனியார் போர்வெல் அமைத்துள்ளனர். இதனால், எங்கள் ஊராட்சியின் குடிநீராதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, தண்ணீர் எடுத்துச்செல்வதை தடை செய்யவேண்டும்.
அலகுமலை, பொங்கலுார், உகாயனுார் ஊராட்சிக்கு உட்பட்ட பொது வண்டிப்பாதையில் தண்ணீர் எடுத்துச்செல்லும் குழாய் அமைக்க, ஊராட்சி நிர்வாகத்திடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ எந்த அனுமதியும் பெறவில்லை. அனுமதி பெறாமல் பதிக்கப்பட்ட குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினார்.
-------------------
கோழிப்பண்ணைக்காக முறைகேடாக குழாய் பதித்து தண்ணீர் எடுத்து செல்வதை தடை செய்ய வலியுறுத்தி திரண்ட அலகுமலை கிராம பொதுமக்கள்.