/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புறவழிச்சாலை திட்டம் விரைவுபடுத்த எதிர்பார்ப்பு? புறவழிச்சாலை திட்டம் விரைவுபடுத்த எதிர்பார்ப்பு?
புறவழிச்சாலை திட்டம் விரைவுபடுத்த எதிர்பார்ப்பு?
புறவழிச்சாலை திட்டம் விரைவுபடுத்த எதிர்பார்ப்பு?
புறவழிச்சாலை திட்டம் விரைவுபடுத்த எதிர்பார்ப்பு?
ADDED : செப் 26, 2025 06:42 AM
பல்லடம்; பல்லடத்தில், புறவழிச்சாலை திட்டத்தை விரைவு படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, கொச்சி, அவிநாசி, பொள்ளாச்சி, உடுமலை ஆகிய முக்கிய நகரங்களுக்குச் செல்லும், பிரதான வழித்தடமாக உள்ளது பல்லடம். இங்கு, பல ஆண்டுகளாக, போக்கு வரத்து நெரிசல் பிரச்னை தொடர்ந்து வருகிறது.
போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, கடந்த, 15 ஆண்டுகளாகவே, தொழில் துறையினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக, 2016ல், அறிவிக்கப்பட்ட கரூர் - -கோவை பசுமைவழிச் சாலை திட்டம், விவசாயிகள் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின், 2018ல், பல்லடம் -- திருப்பூர் ரோட்டுடன், கோவை - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், புறவழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது.
தேசிய நெடுஞ் சாலையை இணைக்கும் வகையிலான புறவழிச் சாலையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தான் செயல்படுத்த முடியும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டதாலும், திட்டம் கிடப்பில் போடப் பட்டது.
இவ்வாறு, ஐந்து ஆண்டு கள் கடந்த நிலையில், நடப்பு ஆண்டு, புதிய புறவழிச்சாலை அமைக்க முன் வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதற்கான அளவீடு பணியை துவங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தொழில் துறையினர், விவசாயிகள், 2018ல் அறிவித்த பழைய புறவழிச்சாலை திட்டத்தையே செயல் படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கிடையே, பழைய திட்டத்தால் பாதிப்பு இருப்பதாக கூறி, மற்றொரு தரப்பினரும் மனு கொடுத்தனர்.
இதனால், புறவழிச்சாலை திட்ட பணிகள் மீண்டும் கிடப்பில் போடப்பட்டு, இரு திட்டங்களில் உள்ள நிறை குறைகளை கண்டறிவதற்கான, ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'பல்லடத்தில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புறவழிச்சாலை வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
ஆனால், தற்போது, புதிய திட்டம் வேண்டாம்; பழைய திட்டம் வேண்டாம் என, மாறி மாறி மனு கொடுத்தால், நாங்கள் என்ன செய்ய முடியும்? இரு திட்டங்களின் வேறுபாடுகளை அறிய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.
எனவே, திட்டம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படுகிறது,' என்றனர்.