Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அறுவடை நெருங்குது! நெல் கொள்முதல் மையம் துவங்கணும்; இயந்திரங்கள் தருவிக்க வேண்டுகோள்

அறுவடை நெருங்குது! நெல் கொள்முதல் மையம் துவங்கணும்; இயந்திரங்கள் தருவிக்க வேண்டுகோள்

அறுவடை நெருங்குது! நெல் கொள்முதல் மையம் துவங்கணும்; இயந்திரங்கள் தருவிக்க வேண்டுகோள்

அறுவடை நெருங்குது! நெல் கொள்முதல் மையம் துவங்கணும்; இயந்திரங்கள் தருவிக்க வேண்டுகோள்

ADDED : அக் 07, 2025 09:07 PM


Google News
Latest Tamil News
உடுமலை: அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில், நெல் அறுவடை துவங்க உள்ள நிலையில், விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பதை தடுக்க, அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கவும், தேவையான அறுவடை இயந்திரங்களையும் ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, உடுமலை, மடத்துக்குளம் தாலுகா, பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த ஜூன் 7ம் தேதி நீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து, விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு, நாற்றங்கால் முறை, பாய் நாற்றங்கால் முறைகளில், நெல் நடவு செய்தனர். தற்போது, இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளது.

அமராவதி அணை பூச்சிமேடு, கல்லாபுரம், வேல் நகர், மாவளம்பாறை, கொழுமம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு உள்ளிட்ட பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களில், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, இப்பகுதிகளில், நடவு செய்யப்பட்ட நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளது.

எனவே, அறுவடைக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பதை தடுக்கும் வகையில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களை உடனடியாக திறக்கவும், கட்டுப்பாடுகள் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் , என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்பார்ப்பு விவசாயிகள் கூறியதாவது:

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, பூச்சிமேடு மற்றும் முதலில் நடவு செய்த மடத்துக்குளம் பகுதிகளில் அறுவடை துவங்க உள்ளது.

தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் நெல் அறுவடை துவங்கும். கடந்த ஆண்டை காட்டிலும், தொழிலாளர்கள், டிராக்டர் உள்ளிட்டவற்றுக்கான கூலி அதிகரித்துள்ள நிலையில், உரம், மருந்து என இடு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

பூச்சி நோய், இலைக்கருகல் என ஒரு சில பகுதிகளில் தாக்குதல் ஏற்பட்டு. வழக்கத்தை காட்டிலும் நடப்பாண்டு, ஏக்கருக்கு, 45 ஆயிரம் ரூபாய் வரை சாகுபடி செலவு ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டு, அறுவடைக்கு இயந்திரம் கிடைக்காமல், பதிவு செய்து ஒரு மாதம் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் நெல் அறுவடை துவங்க உள்ள நிலையில், உடுமலை, மடத்துக்குளம் வட்டார வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள், தேவையான நெல் அறுவடை இயந்திரங்களை தருவிக்கவும், தடையில்லாமல் அறுவடை பணி நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது, வட கிழக்கு பருவ மழையும் துவங்க உள்ளதால், மழை காரணமாக நெற் பயிர்கள் பாதிப்பதை தடுக்க, தேவையான அறுவடை இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அதே போல், அறுவடை துவங்கி, வரத்து அதிகரித்து, நெல் விலை சரிவை தடுக்கும் வகையில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களை தேவையான இடங்களில் உடனடியாக துவக்க வேண்டும்.

உடுமலை வட்டாரத்தில், கடந்தாண்டு, 3 மையங்களும், மடத்துக்குளத்தில், 4 மையங்களும் திறக்கப்பட்டது. நடப்பாண்டு, கூடுதல் மையங்களை திறக்கவும், விவசாயிகளிடம் ஈரப்பதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இல்லாமல், அனைத்து விவசாயிகளிடமும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

அதனால், நெல் கொள்முதல் மையங்களில் தேவையான பணியாளர்கள், அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

துவங்குவது எப்போது?

அதிகாரிகள் கூறுகையில்,' அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், நெல் கொள்முதல் மையங்கள் திறக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு, சன்ன ரக நெல் குவிண்டால், ரூ.2,545 மற்றும் பொது ரகம், ரூ.2,480 என அரசு கொள்முதல் விலையாக நிர்ணயித்துள்ளது. அரசு நெல் கொள்முதல் மையங்கள் விரைவில் துவக்கப்படும். அறுவடைக்கு தேவையான இயந்திரங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us