/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாதுகாப்பு மையங்களை மேம்படுத்துங்க! முழுமையான பயன்பெற எதிர்பார்ப்பு பாதுகாப்பு மையங்களை மேம்படுத்துங்க! முழுமையான பயன்பெற எதிர்பார்ப்பு
பாதுகாப்பு மையங்களை மேம்படுத்துங்க! முழுமையான பயன்பெற எதிர்பார்ப்பு
பாதுகாப்பு மையங்களை மேம்படுத்துங்க! முழுமையான பயன்பெற எதிர்பார்ப்பு
பாதுகாப்பு மையங்களை மேம்படுத்துங்க! முழுமையான பயன்பெற எதிர்பார்ப்பு
ADDED : செப் 25, 2025 11:52 PM
உடுமலை; மாற்றுத்திறன் குழந்தைகளை பராமரிக்கும், பகல் நேர பாதுகாப்பு மையங்களை மேம்படுத்துவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளி செல்லும் வயதில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பராமரித்துக்கொள்வதற்கு, பகல் நேர பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில், 13 வட்டாரங்களிலும் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.இந்த மையங்களில், 18 வயது வரை உள்ள பள்ளி செல்ல முடியாமல் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த மையங்களுக்கு, குழந்தைகளை அழைத்து வருவதற்கான போக்குவரத்து தொகை மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இந்த தொகை சீராக வழங்கப்படுவதிலும் சிக்கலான நிலையே தொடர்கிறது.
போக்குவரத்து வசதிக்கு போதிய ஒதுக்கீடு இல்லாததால், மையத்தின் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளை மட்டுமே அழைத்து வர முடிகிறது.
இதனால், மையத்தின் சுற்றுப்பகுதியில், தொலைதுாரத்திலுள்ள குழந்தைகளுக்கு இத்திட்டம் சென்றடைவதில்லை. குழந்தைகளுக்கு முன்பு பச்சை பயிறு, பேரிச்சம்பழம், பால், பிஸ்கட், சுண்டல் என ஐந்து நாட்களும், வெவ்வேறு வகையான சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.
தற்போது அதுவும் நடைமுறையில் இல்லை. குழந்தைகளின் உடல் குறைபாடுகளை மேம்படுத்த, 'பிசியோதெரபி', சிகிச்சை அளிப்பதற்கு முறையான பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை.
'பிசியோதெரபி', வழங்குவதற்கான தளவாடங்களும் பழுதடைந்து விட்டதால், புதிய தளவாடப் பொருட்கள் தேவையாக உள்ளது. மையங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் தாமதமாகவும், ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும், இந்த மையத்தின் வாயிலாக, கல்வி கிடைக்கும். வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு, பெற்றோர் இம்மையத்தில் விடுகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்தி, அவர்களுக்கான வசதிகளை செய்து தர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தினத்தை சிறப்பாக கொண்டாட அறிவிக்கும் அரசு, அந்த குழந்தைகளுக்கான மையங்களின் அடிப்படை தேவைகளிலும் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.