/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொழிற்சங்கங்களுடன் இணைந்து 'ஏஐ' குறித்த கொள்கை உருவாக்கம்; கருத்தரங்கில் எம்.பி., வலியுறுத்தல் தொழிற்சங்கங்களுடன் இணைந்து 'ஏஐ' குறித்த கொள்கை உருவாக்கம்; கருத்தரங்கில் எம்.பி., வலியுறுத்தல்
தொழிற்சங்கங்களுடன் இணைந்து 'ஏஐ' குறித்த கொள்கை உருவாக்கம்; கருத்தரங்கில் எம்.பி., வலியுறுத்தல்
தொழிற்சங்கங்களுடன் இணைந்து 'ஏஐ' குறித்த கொள்கை உருவாக்கம்; கருத்தரங்கில் எம்.பி., வலியுறுத்தல்
தொழிற்சங்கங்களுடன் இணைந்து 'ஏஐ' குறித்த கொள்கை உருவாக்கம்; கருத்தரங்கில் எம்.பி., வலியுறுத்தல்
ADDED : ஜூன் 17, 2025 11:35 PM

திருப்பூர்; தொழிற்சங்கங்களுடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த கொள்கையை உருவாக்க வேண்டுமென, கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
'செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சி, தொழிலாளர்களுக்கான தாக்கமும், விளைவுகளும்' என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கு, ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. பனியன் சங்க துணை தலைவர் ரவி தலைமை வகித்தார்.
துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., தேசிய துணை தலைவர் சுப்பராயன், தேசிய செயலாளர் வஹிதா நிஜாம், மாநில செயலாளர் பாஸ்கர், பொருளாளர் பீட்டர் துரைராஜ், மாவட்ட பொதுசெயலாளர் நடராஜன், பனியன் சங்க பொதுசெயலாளர் சேகர் உள்ளிட்டோர் பேசினர்.
பனியன் தொழிலாளர் உட்பட, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, விரிவடைந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் பயன்பாட்டுக்கு உதவும் வகையிலும், கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் இருக்க வேண்டுமென வலியுறுத்தி பேசினர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அனைத்து தொழில் பிரிவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி பெருகும், ஒரு சில வேலை வாய்ப்புகளையும் உருவாக்க வாய்ப்புள்ளது. பல வேலை வாய்ப்பு பறிபோகவும் வாய்ப்புள்ளது.
எனவே, எத்தகைய துறைகளில் இதனை அனுமதிக்கலாம் என்பதை எச்சரிக்கையுடன் முடிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
எம்.பி., சுப்பராயன் பேசுகையில்,'' செயற்கை நுண்ணறிவு என்ற 'ஏஐ' தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு குறித்த கொள்கையை மத்திய அரசு, தொழிற்சங்கங்களுடன் இணைந்து உருவாக்க வேண்டும்,'' என்றார்.