/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அமராவதியில் உபரி நீர் வெளியேற்றம்; தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அமராவதியில் உபரி நீர் வெளியேற்றம்; தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
அமராவதியில் உபரி நீர் வெளியேற்றம்; தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
அமராவதியில் உபரி நீர் வெளியேற்றம்; தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
அமராவதியில் உபரி நீர் வெளியேற்றம்; தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 17, 2025 09:11 PM

உடுமலை; உடுமலை பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையால், சீதோஷ்ண நிலை குளுகுளுவென மாறியுள்ளது; அமராவதி அணையிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
உடுமலை பகுதியில், தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கி பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக, பகலிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது; இடைவெளி விட்டு, சாரல் மழையும் பெய்தது.
இதனால், சீதோஷ்ண நிலை 'குளுகுளுவென' மாறியுள்ளது. பகலில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
பெதப்பம்பட்டியில் அதிகபட்சமாக 25 மி.மீ., மழையளவு பதிவானது. தொடர் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அமராவதி அணையிலிருந்து நேற்றும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.நேற்று காலை நிலவரப்படி, அணையின் நீர் மட்டம், 90 அடிக்கு 87.83 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு, 7,500 கன அடியாக இருந்ததால், பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று காலை, நான்கு மேல்மதகு வழியாக தண்ணீரை வெளியேற்றினர். பின்னர், அம்மதகுகள் மூடப்பட்டு, கீழ் மதகில், ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. வினாடிக்கு, 6 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது.
நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பொதுப்பணித்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.