Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவருக்கு பிரம்படி ஆசிரியர் 'சஸ்பெண்ட்' தலைமையாசிரியர் இடமாற்றம்

மாணவருக்கு பிரம்படி ஆசிரியர் 'சஸ்பெண்ட்' தலைமையாசிரியர் இடமாற்றம்

மாணவருக்கு பிரம்படி ஆசிரியர் 'சஸ்பெண்ட்' தலைமையாசிரியர் இடமாற்றம்

மாணவருக்கு பிரம்படி ஆசிரியர் 'சஸ்பெண்ட்' தலைமையாசிரியர் இடமாற்றம்

ADDED : மார் 16, 2025 01:42 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்:வளவனுார் அருகே அரசு பள்ளி மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த வி.அகரம் அரசு உயர்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவரை நேற்று முன்தினம் மாணவி கிண்டல் செய்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவர், மாணவியை பள்ளி இடைவேளையின் போது தாக்கியுள்ளார்.

இது பற்றி அய்யூர் அகரம் கிராமத்தை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் செங்கேணி, 50; என்பவரிடம் மாணவி புகார் தெரிவித்தார். ஆசிரியர் செங்கேணி, அந்த மாணவரை கண்டித்து பிரம்பால் அடித்துள்ளார். இதனால், மாணவர், பல மணி நேரமாக வகுப்பறையில் அழுததால் வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார்.

மாணவரை மீட்ட ஆசிரியர்கள், அருகே உள்ள ஏ.கே.குச்சிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து, பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்கு வந்த பெற்றோரிடம், மாணவர் தலைவலி அதிகமாக உள்ளதாக கூறியதால், டாக்டர்கள் மேல்சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும் தலைவலி சரியாகாததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மாணவரின் தந்தை, வளவனுார் போலீசில் புகார் அளித்தார்.

அதில், ''எனது மகனை உடற்கல்வி ஆசிரியர் செங்கேணி மிரட்டி, தாக்கியுள்ளார். இதனால், எனது மகனுக்கு தலையில் அடி பட்டுள்ளது. ஆசிரியர் செங்கேணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில், ஆசிரியர் செங்கேணி மீது மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர்.

இந்நிலையில்,மாணவரின் உறவினர்கள் நேற்று காலை 11:00 மணியளவில் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவனை அடித்த ஆசிரியர் மீதும், இந்த சம்பவம் பற்றி பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்காத தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

அவர்களிடம் வளவனுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை ஏற்று, 12:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து, வி.அகரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் நேரில் சென்று, சம்பவம் குறித்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின், உடற்கல்வி ஆசிரியர் செங்கேணியை சஸ்பெண்ட் செய்தும், தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமியை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டார்.

பள்ளியில் பதற்றமான சூழல் நிலவியதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us