159 ஆண்டு பத்திரங்கள் டிஜிட்டலுக்கு மாற்றம்
159 ஆண்டு பத்திரங்கள் டிஜிட்டலுக்கு மாற்றம்
159 ஆண்டு பத்திரங்கள் டிஜிட்டலுக்கு மாற்றம்
ADDED : ஜூலை 01, 2024 12:53 AM

சென்னை: பதிவுத்துறை துவங்கிய காலம் முதல், தற்போது வரையிலான 159 ஆண்டுகளில் பதிவான அனைத்து பத்திரங்களும், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளதால், சான்றிட்ட நகல்களை எளிதாக பெறலாம்.
தமிழகத்தில் சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்கள், சார் -- பதிவாளர் அலுவலகம் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. பத்திரப்பதிவு பணிகள் படிப்படியாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
'ஸ்டார் - 2.0' சாப்ட்வேர் வருகையால், சொத்து பரிமாற்றம் குறித்த விபரங்களை ஆன்லைன் முறையில் உள்ளீடு செய்வது கட்டாயம்.
இதன் அடிப்படையில், சரிபார்ப்பு முடிந்து நேரம் ஒதுக்கும் போது, அச்சிடப்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்படும். இவ்வாறு பதிவாகும் பத்திரம், அதன் இணைப்பு என, அனைத்து பக்கங்களும் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவேற்றப்படும்.
இதில், கணினிமய மாக்கல் துவங்கிய காலத்தில் பதிவான பத்திரங்கள் மட்டுமே ஸ்கேன் செய்யப்பட்டதால், அதற்கு முந்தைய ஆவணங்கள் மேனுவல் முறையிலேயே பராமரிக்கப்பட்டன.
இந்நிலையில், சொத்து விற்பனை தொடர்பாக பதிவான பத்திரங்களின் சான்றிட்ட பிரதிகளை, கட்டணம் செலுத்தி ஆன்லைன் முறையில் பெறும் திட்டம் அமலாகி உள்ளது.
ஆனாலும், கணினிமயமாக்கலுக்கு முந்தைய காலத்து பத்திரங்களின் பிரதிகளை, மேனுவல் முறையில் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.
இது குறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவான அனைத்து பத்திரங்களும் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. இதன்படி, பதிவுத்துறை துவங்கப்பட்ட 1865 முதல், 2009 வரையிலான காலத்தில் பதிவான பத்திரங்கள் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன.
எனவே, சொத்து வாங்குவோர், 159 ஆண்டுகள் வரையிலான முந்தைய ஆவணங்களின் பிரதிகளை, ஆன்லைன் முறையில் எளிதாக பெறலாம். சார் - பதிவாளர் அலுவலகம் தேடி அலைய வேண்டிய தேவை இருக்காது.
மேலும், ஒரு சொத்து பதிவுக்கு வரும் போது, அது குறித்த முந்தைய பரிமாற்றங்களை, சார் - பதிவாளர்கள் எளிதில் கணினி தகவல் தொகுப்பு வாயிலாக, உடனுக்குடன் பார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்துவதில், இது ஒரு முக்கிய முன்னேற்றமாகவும் அமைந்துஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.