மத்திய பிரதேசத்தை மாற்ற வாருங்கள்: தமிழக தொழில் அதிபர்களுக்கு முதல்வர் மோகன் யாதவ் அழைப்பு
மத்திய பிரதேசத்தை மாற்ற வாருங்கள்: தமிழக தொழில் அதிபர்களுக்கு முதல்வர் மோகன் யாதவ் அழைப்பு
மத்திய பிரதேசத்தை மாற்ற வாருங்கள்: தமிழக தொழில் அதிபர்களுக்கு முதல்வர் மோகன் யாதவ் அழைப்பு
ADDED : ஜூலை 25, 2024 03:05 PM

கோவை: 'தமிழகத்திற்கும், மத்திய பிரதேசத்திற்கும் கலாசாரம், உள்ளிட்டவற்றில் பல்வேறு ஒற்றுமை உள்ளது. மத்திய பிரதேசத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வாருங்கள்' என ம.பி முதல்வர் மோகன் யாதவ் கூறினார்.
வடமாநில அரசுகள், தமிழகத்தில் உள்ள தொழிலை தங்கள் மாநிலத்தில் துவக்கி, வேலை வாய்ப்பு வழங்க முயற்சிக்கின்றன. ம.பி., மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் தலைமையிலான குழுவினர் கோவையில் முகாமிட்டு, தொழில்துறையினரை சந்தித்தனர். இந்நிலையில், இன்று(ஜூலை 25) கோவை வந்த ம.பி முதல்வர் மோகன் யாதவ் அனைத்து தொழில் துறையினரையும் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெற்றது.
தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்த முதல்வர் மோகன் யாதவ் அம்மாநிலத்தில் தொழில் துவங்குவதால் கிடைக்கும் சலுகைகள், அரசு திட்ட உதவிகள் குறித்து விரிவாக கூறினார். பின்னர், மோகன் யாதவ் பேசியதாவது: மத்திய பிரதேசத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வாருங்கள்.
மத்தியபிரதேச மாநிலத்தின் தொழில் வளர்ச்சி கழக அலுவலகம் கோவையில் துவங்கப்படும். தமிழகத்திற்கும், மத்திய பிரதேசத்திற்கும் கலாசாரம், உள்ளிட்டவற்றில் பல்வேறு ஒற்றுமை உள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. தமிழகம் மற்றும் மத்திய பிரதேச மாநில தொழில்துறையினர் இணைந்து செயல்பட்டு, உற்பத்தி துறையில் மாநிலத்தை முன்னேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.