குடிநீரில் தொடரும் பிரச்னை காய்ச்சி குடிக்க அறிவுரை!
குடிநீரில் தொடரும் பிரச்னை காய்ச்சி குடிக்க அறிவுரை!
குடிநீரில் தொடரும் பிரச்னை காய்ச்சி குடிக்க அறிவுரை!
ADDED : ஜூலை 02, 2024 09:31 PM
சென்னை:தமிழகத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு போன்ற காரணங்களால், வயிற்றுப்போக்கு மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும் என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குடிநீரில் கழிவுநீர் கலப்பாலும், சரியாக சுத்திகரிக்காமல் வழங்கப்படும் குடிநீராலும், வாந்தி, பேதி, காலரா போன்ற தொற்றுநோய் பாதிப்புகள் பரவி வருகின்றன.
இவற்றை தடுக்கும் வகையில், ஆகஸ்ட், 31 வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, ஓ.ஆர்.எஸ்., கரைசல், ஜிங்க் மாத்திரை போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து அருந்த வேண்டும் என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனைகள் வரை, குடிநீரால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க, போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், பொதுமக்கள் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும்.
அதேநேரம், உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் குடிநீரை நன்றாகக் காய்ச்சி, அவை குளிர்ந்த பின் அருந்துவது அவசியம். அவ்வாறு அருந்தினால், குடிநீரால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை பெருமளவு குறைக்கலாம்.
இதுகுறித்து, பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.