ஹோட்டல், கிளப்பில் மது விற்பனை ஆய்வு செய்ய அரசு குழு நியமனம்
ஹோட்டல், கிளப்பில் மது விற்பனை ஆய்வு செய்ய அரசு குழு நியமனம்
ஹோட்டல், கிளப்பில் மது விற்பனை ஆய்வு செய்ய அரசு குழு நியமனம்
ADDED : ஜூன் 26, 2024 04:00 AM
சென்னை : நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க தீவிர ஆய்வுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, கலால் துறை, 'டாஸ்மாக்' மேலாளர், வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. இது தவிர, நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களிலும் மது விற்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கிளப்களில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கு மது விற்பது, அரசு அனுமதி அளிக்காத மது வகைகளை விற்பது, அரசு அனுமதித்த நேரத்தை விட கூடுதல் நேரம் செயல்படுவது என, பல விதிமீறல்கள் நடக்கின்றன. இதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பணியை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
அதன்படி, நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுவில் கலால் துறை, மது விலக்கு ஆயத்தீர்வை, டாஸ்மாக் மாவட்ட மேலாளர், வருவாய் துறை ஆர்.டி.ஓ., ஆகியோர் உள்ளனர்.
இக்குழு தொடர் ஆய்வு மேற்கொண்டு, முறைகேடுகளில் ஈடுபடும் கிளப்கள், ஹோட்டல்களுக்கு 'சீல்' வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும். ஆய்வு தொடர்பான அறிக்கையை கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.