தர்மபுரி மாவட்ட பெரும்பாலை அகழாய்வில் ஆய்வாளர்களை கவர்ந்த பானை குறியீடுகள்
தர்மபுரி மாவட்ட பெரும்பாலை அகழாய்வில் ஆய்வாளர்களை கவர்ந்த பானை குறியீடுகள்
தர்மபுரி மாவட்ட பெரும்பாலை அகழாய்வில் ஆய்வாளர்களை கவர்ந்த பானை குறியீடுகள்
ADDED : ஜூன் 26, 2024 04:52 AM

சென்னை : தர்மபுரி மாவட்டம் பெரும்பாலையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த பானைக் குறியீடுகள், தொல்லியல் ஆய்வாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் - மேச்சேரி சாலையில், தெற்கே 25வது கி.மீ., தொலைவில் உள்ளது பெரும்பாலை கிராமம். இது, நாகவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள செம்மனுார் சிவன் கோவிலுக்கு எதிரில், பெரிய தொல்லியல் மேடு கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு, தமிழக தொல்லியல் துறை சார்பில், 2022 - 23ம் ஆண்டில், பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா ஆகியோர் தலைமையில் அகழாய்வு செய்யப்பட்டது. இதுகுறித்த அகழாய்வு அறிக்கையை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார்.
இந்த அகழாய்வில், வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் இரும்பு காலத்தை சேர்ந்த மக்கள், பல்வேறு காலகட்டங்களில் இங்கு வசித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு சான்றாக, சிவப்பு, கருப்பு - சிவப்பு மண்பாண்டங்கள், சுடுமண் பொம்மை, சங்கு வளையல்கள், வட்டச்சில்லுகள், சுடுமண் மணிகள், கண்ணாடி வளையல்கள், செம்பு மற்றும் இரும்பாலான பொருட்களின் பகுதிகள், விலை உயர்ந்த மணிகள், பூசப்பட்ட தரைதளம், செங்கல் பட்டைகளுடன் தொழில் பட்டறைகளுக்கான அடையாளங்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.
அவற்றில், மண்பாண்டங்களில் இடப்பட்ட வடிவியல் சார்ந்த குறியீடுகள் ஆய்வாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
அதாவது, 1 லட்சம் சதுர மீட்டர் உள்ள தொல்லியல் மேட்டில், வெறும் 425 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே, அதாவது 0.425 சதவீத பகுதியில் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டது.
அதில், 1,028 பானைக் குறியீடுகள் கிடைத்துள்ளன. அவற்றில், 297 குறியீடுகள் நன்கு அடையாளம் காண்பவையாகவும், 731 குறியீடுகள் வரையறுக்க முடியாதவையாகவும் உள்ளன.
அவற்றிலும் பெரும்பாலானவற்றில், ஒரே மாதிரியான குறியீடுகள் உள்ளன. அதாவது, நட்சத்திரம், ஆங்கில எழுத்துகளான யு, டி, ஏ போன்ற வடிவங்கள், ஏணி, ஸ்வஸ்திக், வில் - அம்பு உள்ளிட்ட வடிவங்கள் அதிகளவில் உள்ளன.
அதேபோல, கிடைக்கோட்டின் கீழ், வலப்பக்கமும், இடப்பக்கமும் சம எண்ணிக்கையில் சரிந்த கோடுகள் உள்ள கீறல்கள், கிடைமட்டமாக சம இடைவெளியுடன் கூடிய இரண்டு கோடுகள், இரண்டு செங்குத்து கோடுகளுக்கு மேல் அல்லது நடுவில் அலைபோல் நெளிந்த கோடுகள் உள்ளிட்ட வடிவியல் கீறல்கள் அதிகளவில் உள்ளன. ஆனால், ஒரு தமிழி எழுத்து கீறல் கூட கிடைக்கவில்லை.
இங்குள்ள அகழாய்வு குழிகளில் இருந்து நான்கு கரிமப்பொருட்கள், அமெரிக்காவில் உள்ள பீட்டா காலக்கணிப்பு ஆய்வகத்திற்கு அனுப்பி சோதிக்கப்பட்டதில், அவை, கி.மு., ஆறாம் நுாற்றாண்டுக்கு முன், பின் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற குறியீடுகள், ஈரோடு மாவட்டம் கொடுமணல், திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் கிடைத்துள்ளன.
இவற்றில் இருந்து, தமிழில் எழுத்துகள் தோன்றும் முன், வர்த்தகர்கள் தங்களின் கருத்தை தெரிவிக்க, இதுபோன்ற குறியீடுகளை தமிழகம் முழுதும் பயன்படுத்தி இருக்கலாம் என்றும், இதுகுறித்த விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.