கும்மிடியில் பதுங்கிய வடமாநில கொள்ளையர்கள்: 2 மணி நேரம் 'சேஸ்' செய்து பிடித்த போலீசார்
கும்மிடியில் பதுங்கிய வடமாநில கொள்ளையர்கள்: 2 மணி நேரம் 'சேஸ்' செய்து பிடித்த போலீசார்
கும்மிடியில் பதுங்கிய வடமாநில கொள்ளையர்கள்: 2 மணி நேரம் 'சேஸ்' செய்து பிடித்த போலீசார்
ADDED : ஜூலை 01, 2024 05:23 AM

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி கோழி பண்ணையில் பதுங்கியிருந்து, மாடு திருடிய வடமாநில கொள்ளையர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை கிராமத்தில், பாழடைந்த கோழிப்பண்ணை உள்ளது. இங்கு வடமாநில கொள்ளையர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சில நாட்களாக நோட்டம்விட்ட போலீசார், கைது செய்ய முடிவு செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையிலான போலீசார், கோழிப்பண்ணையை சுற்றி வளைத்தனர்.
போலீசார் வருவதை அறிந்த வடமாநில கொள்ளையர்கள், கர்நாடகா மாநில பதிவு எண் உடைய, 'பொலீரோ பிக் அப்' சரக்கு வாகனத்தில் தப்ப முயன்றனர்.
அவர்களை கோழிப்பண்ணை நுழைவாயிலில் வழிமறித்த போலீசார் மீது, வாகனத்தை ஏற்றியும் கொல்ல முயன்றனர்; அதற்குள் போலீசார் சுதாரித்ததால் உயிர் தப்பினர்.
இதுபற்றிய தகவலறிந்த கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி, கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலை கண்ணம்பாக்கம் சந்திப்பில், போலீஸ் ஜீப்பை குறுக்கே நிறுத்தி, கொள்ளையர்களின் வருகைக்காக காத்திருந்தார்.
அப்போது, அதிவேகமாக வந்த கொள்ளையர்களின் வாகனம், போலீஸ் ஜீப்பை இடித்து தள்ளி, நிற்காமல் வலதுபுறமாக கவரைப்பேட்டையை நோக்கி பறந்தது.
இதையடுத்து, எட்டுக்கும் அதிகமான போலீசார், ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்களில் கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். அதற்குள் கொள்ளையர்கள் சென்ற வாகனம், குருவராஜகண்டிகை தைலத்தோப்பிற்குள் புகுந்தது.
பின் தொடர்ந்து சென்ற போலீசார், கொள்ளையர்கள் பதுங்கிய பகுதியில், தங்களின் வாகனங்களை நிறுத்தி, அப்பகுதி முழுதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
இந்த நேரத்தில், தைலந்தோப்பில் இருந்து வெளியேறிய கொள்ளையர்கள், பெரிய புலியூர், தேர்வாய்கண்டிகை, 'சிப்காட்' வழியாக தப்பிச்செல்ல முற்பட்டனர்.
அவர்களை பின் தொடர்ந்து போலீசாரும் சென்றனர்.
அப்போது, சரக்கு வாகனத்தில் சென்ற கொள்ளையர்களில் மூவர், போலீசாரின் ஜீப் மீது கற்களை சரமாரியாக வீசினர்.
இதற்கிடையில், ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,க்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் தலைமையில் ஏராளமான போலீசார், வடமாநில கும்பலுக்கு தடை ஏற்படுத்தும் நோக்கில், பாலவாக்கம் சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தினர்.
லாரி நிறுத்தப்பட்டிருந்ததை பார்த்த கொள்ளையர்கள், இனி தப்ப முடியாது என உணர்ந்து, தாங்கள் சென்ற வாகனத்தில் இருந்து குதித்து ஆளுக்கொரு திசையில் ஓடினர்.
ஏற்கனவே அங்கு கூடியிருந்த போலீசார், அவர்களை விரட்டிப் பிடித்தனர். இதன் வாயிலாக, இரண்டு மணி நேரமாக நடந்த, 'சேஸ்' முடிவுக்கு வந்தது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஆசிப்கான், 37, சலீம், 32, அஸ்லாம் கான், 44, அல்டாப், 37, மற்றும் கவரைப்பேட்டை திவாகர், 25 என, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
வடமாநில கொள்ளையர்கள், பாழடைந்த கோழிப்பண்ணையில் தங்கி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட ஆந்திர எல்லையோர பகுதிகளில், கால்நடைகள் திருடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
திருடப்படும் மாடுகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி, கேரளாவுக்கு அடிமாட்டுக்கு அனுப்பி உள்ளனர். நான்கு மாதங்களாக, இந்த திருட்டு தொழிலை செய்து வந்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து, சரக்கு வாகனம், மாடு பிடி கயிறுகள், கத்திகள் மற்றும் இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.