தமிழக ஆட்சியை கலைக்க அமைச்சர் கூற்றே போதுமானது : பிரேமலதா
தமிழக ஆட்சியை கலைக்க அமைச்சர் கூற்றே போதுமானது : பிரேமலதா
தமிழக ஆட்சியை கலைக்க அமைச்சர் கூற்றே போதுமானது : பிரேமலதா
ADDED : ஜூலை 01, 2024 05:11 AM

கோவை: ''அரசு விற்கும் மதுவில், 'கிக்' இல்லை, என சட்டசபையில் ஒரு அமைச்சரே பேசியிருப்பது கண்டனத்துக்குரியது, என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால், 69 உயிர்களை இழந்துள்ளோம். மிக முக்கியமாக ஒரு பொறுப்பில் உள்ள மூத்த அமைச்சர், சட்டசபையில் பேசும்போது, டாஸ்மாக் சரக்கில், 'கிக்' இல்லாததால் தான் மக்கள் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர் என, மிக மோசமாக பேசியுள்ளார்.
முதல்வர் முன்பே அவர், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல், கிக்கு, சரக்கு என்றெல்லாம் கிறுக்குத்தனமாக பேசுகிறார். அதுமட்டுமல்ல, குடிப்பவர்கள் அவர்களாக திருந்தினாலே தவிர திருத்த முடியாது என, சொல்லியிருக்கிறார். எல்லா இடங்களிலும் டாஸ்மாக் கடை வைக்க முடியுமா என்றும் துரைமுருகன் கேட்டுள்ளார். கடைகள் வைக்க முடியாது சரி... போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா என, மக்கள் கேட்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மட்டுமின்றி, பொள்ளாச்சியிலும் கள்ளச்சாராய சம்பவம் நடந்துள்ளது. தமிழகம் முழுதும் கள்ளச்சாராயம் இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து, வாயை அடைத்து விடுகின்றனர்.
சென்னையில் கழிவுநீரும் குடிதண்ணீரும் கலந்து வருகிறது. 11 வயது குழந்தையை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்ய, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். உயிருக்கு எந்த மரியாதையும் இங்கு கிடையாது. இதுதான் தி.மு.க., ஆட்சியின் அவல நிலை. கள்ளச்சாராயம் காய்ச்சினால், ஆயுள் தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் என, முதல்வர் கூறியுள்ளார். இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கும், புதிய சட்டம் பொருந்துமா என்பதை முதல்வர் சொல்ல வேண்டும். ஆளுங்கட்சியின் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது.
கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதற்கு, முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர் அமைச்சர் முத்துசாமி. அவர் பதவி விலக வேண்டும். டாஸ்மாக்கில் விலை கூடுதலாக இருக்கின்றது எனச் சொல்லி, கள்ளச்சாராயம் குடிப்பதாக அமைச்சரே சொல்கிறார்.
இந்த அரசை, 'டிஸ்மிஸ்' செய்ய இந்த கூற்று ஒன்றே போதும். 'டாஸ்மாக் சரக்கை விட, கள் இறக்குவது எவ்வளவோ மேல்; உடல் நலத்துக்கும் நல்லது' என்கின்றனர். ஆனால், அரசின் வருமானம் குறைந்து விடும் என, கள் இறக்க அனுமதியை மறுக்கின்றனர்.
முதலீடுகளை ஈர்த்து வர துபாய் சென்றார் முதல்வர் ஸ்டாலின். எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளன; எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அடுத்து, அமெரிக்கா செல்லவிருக்கிறார். அப்பயணம் மக்கள் நலனுக்கானதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.,வில் அடுத்த தலைமுறை குறித்து யாரும் யோசிப்பதில்லை.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.