ADDED : ஜூன் 23, 2024 06:35 AM
சென்னை : முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டசபைக்கு வரவில்லை. அமைச்சர் உதயநிதி, அவர் கவனிக்கும் துறை மீது விவாதம் நடந்த போது, சபையில் இருக்கவில்லை.
சட்டசபையில், நேற்று அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். முதல்வர் சட்டசபைக்கு வரவில்லை. மானிய கோரிக்கை மீதான விவாதம் துவங்கும்போது, அமைச்சர் உதயநிதி சபையில் இருந்தார்.
''ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வரும், வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பு, உறுப்பினர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்த பின், மானிய கோரிக்கை பதிலுரையின் போது விளக்கம் அளிக்கிறேன்,'' என, உதயநிதி தெரிவித்தார்.
உடனே சபாநாயகர், ''உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசுவோர், வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் குறித்தும் சேர்த்து பேசலாம். அமைச்சர் உதயநிதி, தன் மானிய கோரிக்கைக்கான பதிலுரையை, வரும் 27ம் தேதி வழங்கும்போது, இப்பொருள் குறித்து விரிவாக பதில் அளிக்கலாம்; அறிவிப்புகளை வெளியிடலாம் என, சபை அனுமதியோடு தெரிவிக்கிறேன்,'' என்றார்.
அதைத் தொடர்ந்து விவாதம் துவங்கியது. அமைச்சர் உதயநிதி, சபையில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன்பின், சபைக்கு வரவில்லை.