திருச்செந்துார் குலசைக்கு 100 சிறப்பு பஸ்கள்
திருச்செந்துார் குலசைக்கு 100 சிறப்பு பஸ்கள்
திருச்செந்துார் குலசைக்கு 100 சிறப்பு பஸ்கள்
ADDED : செப் 26, 2025 01:16 AM
சென்னை:'தசரா' பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருச்செந்துார் மற்றும் குலசேகரன்பட்டினத்துக்கு, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் நடக்கும் தசரா திருவிழா, மிகவும் பிரபலமானது.
இந்த விழாவையொட்டி, செப்., 23 முதல் அக்., 3 வரை, சென்னை, கோவையில் இருந்து, திருச்செந்துார் மற்றும் குலசைக்கு, தினமும் இயக்கக் கூடிய பஸ்களுடன், 100 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேவைக்கு ஏற்ப, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். பண்டிகை முடிந்து பக்தர்கள் திரும்புவதற்கு ஏதுவாக, அக்., 1 முதல் 3ம் தேதி வரை, சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்த பஸ்களில் பயணிக்க, www.tnstc.in இணையதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி., செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருப்பதிக்கும் சிறப்பு பஸ்கள் தமிழக அரசு விரைவு போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், செப்., 24 முதல் அக்., 2 வரை பிரம்மோத்சவ விழா நடக்கிறது. இதில், தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.
எனவே, பயணியர் வசதிக்காக தமிழகத்தில் இருந்து, அக்., 6 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி, நாகை, செங்கோட்டையில் இருந்து, திருப்பதிக்கு வழக்கமாக செல்லும், 60 விரைவு பஸ்களோடு, கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பயணியரின் தேவைக்கேற்ப, விரைவு பஸ்களை அதிகரித்து இயக்க உள்ளோம். பயணியர், www.tnstc.in இணையதளம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.