75 நாட்களில் நாய் கடியால் 1.18 லட்சம் பேர் பாதிப்பு; 'ரேபிஸ்' நோயால் 4 பேர் உயிரிழப்பு
75 நாட்களில் நாய் கடியால் 1.18 லட்சம் பேர் பாதிப்பு; 'ரேபிஸ்' நோயால் 4 பேர் உயிரிழப்பு
75 நாட்களில் நாய் கடியால் 1.18 லட்சம் பேர் பாதிப்பு; 'ரேபிஸ்' நோயால் 4 பேர் உயிரிழப்பு
ADDED : மார் 18, 2025 05:10 AM

சென்னை : தமிழகத்தில், கடந்த இரண்டரை மாதங்களில், 1.18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், நான்கு பேர், 'ரேபிஸ்' நோயால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில், தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், ஏற்படும் ரேபிஸ் தொற்றில் இருந்து, செல்ல பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு தடுப்பூசி தீர்வாக உள்ளது.
நாய்க்குட்டி பிறந்த முதலாண்டில், இரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். தொடர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும், தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இவ்வாறு தடுப்பூசி போடாத நாய்கள், மனிதர்களை கடிக்கும் போது, ரேபிஸ் தொற்று பரவி, இரு தரப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கடந்த ஆண்டில் 4.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக, அரியலுாரில், 37,023; கடலுாரில் 23,997; ஈரோட்டில் 21,507 பேர்; சென்னையில், 24,088 பேர் பாதிக்கப்பட்டனர். உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், 43 பேர் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழந்தனர்.
இந்த ஆண்டு, கடந்த இரண்டரை மாதங்களில், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 764 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் இருவர், ராணிப்பேட்டை, நாமக்கல்லில் தலா ஒருவர் என, நான்கு பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்க் கடியால், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை.
நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை, குரங்கு, நரி, கீரி, ஓநாய், வவ்வால் உள்ளிட்ட விலங்கினங்கள் கடித்தவுடன், ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
நாய் போன்ற விலங்குகள் கடித்தால், அவர்களுக்கு, முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள் மற்றும், 28ம் நாள் என, நான்கு தவணை தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
ஆழமான காயமாக இருந்தால், 'இம்யூனோக்ளோபிலின்' தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால், முறையாக சிகிச்சை பெறாமல், சிலர் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழக்கின்றனர். எனவே, விலங்கினங்கள் கடித்தால், டாக்டரின் ஆலோசனைப்படி முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.