Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை விதைக்க முயற்சி; விஜய்க்கு ஆதரவான சர்வே பற்றி முதல்வர் விமர்சனம்

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை விதைக்க முயற்சி; விஜய்க்கு ஆதரவான சர்வே பற்றி முதல்வர் விமர்சனம்

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை விதைக்க முயற்சி; விஜய்க்கு ஆதரவான சர்வே பற்றி முதல்வர் விமர்சனம்

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை விதைக்க முயற்சி; விஜய்க்கு ஆதரவான சர்வே பற்றி முதல்வர் விமர்சனம்

ADDED : ஜூன் 03, 2025 08:03 AM


Google News
Latest Tamil News
நடிகர் விஜய், ஜனநாயகன் படப்பிடிப்புக்காக, மதுரை விமான நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு கடந்த மே 1ம் தேதி சென்றார். மதுரை விமான நிலையத்தில் இருந்து, திறந்தவேனில் நின்றபடி, அவர் பயணித்தார்.

அப்போது, தொண்டர்களும் மக்களும் விஜயை பார்க்க திரண்டனர். வாகனங்களிலும், மரக்கிளைகளிலும் ஏறி நின்று, விஜயை பார்த்தனர்.விஜயின், 'ரோடு ஷோ' வீடியோவையும், மதுரையில் கடந்த 31ல், முதல்வர் ஸ்டாலின் நடத்திய 'ரோடு ஷோ'வையும் ஒப்பிட்டு, சமூக வலைதளங்களில் த.வெ.க.,வினர் விமர்சித்து வருகின்றனர்.

உங்ககிட்ட பணம் இருக்கலாம்; உச்சபட்ச அதிகாரம் இருக்கலாம். அவதுாறு பரப்ப ஆயிரம்

ஊடகங்கள் இருக்கலாம். ஆனால், மதுரையில் விஜய்க்கு வந்த மாதிரி எதையும் எதிர்பார்க்க முடியாது. அளவு கடந்த அன்பைக் காட்டுற மக்கள் படை மட்டும் என்னைக்குமே உங்களிடம் இருக்காது

மதுரையில், விஜய்க்கு அன்பால் தன்னெழுச்சியாக அலை கடலென திரண்டது மக்கள் கூட்டம். முதல்வர் ஸ்டாலினுக்கு, வெளியூரில் இருந்து காசு கொடுத்து கூட்டியும் கூடாத கூட்டம். அதாவது நீங்கள் நடத்தியது 'ரோடு ஷோ' அல்ல, காமெடி ஷோ. இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

இதற்கிடையில், மதுரையில் நடந்த பொதுக்குழுவில், விஜய் கட்சிக்கு ஆதரவாக வெளியான 'சர்வே' விவகாரத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். சமீபத்தில், மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், வரும் சட்டசபை தேர்தல் குறித்து சர்வே எடுத்துள்ளது. அந்த சர்வே முடிவில், நடிகர் விஜய் கட்சியான த.வெ.க., தனித்துப் போட்டியிட்டு, 95 முதல் 105 தொகுதிகளை கைப்பற்றும் எனக் கூறியுள்ளது.

மேலும், தி.மு.க., 75 முதல் 85 தொகுதிகளும், அ.தி.மு.க., 55 முதல் 65 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும், சொல்லப்பட்டுள்ளது. இந்த சர்வே, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சி தரப்பில், அதற்கு எந்த விமர்சனமும் வராமல் இருந்த நிலையில், பொதுக்குழுவில், முதல்வர் ஸ்டாலின் அதுபற்றி கருத்து கூறியிருக்கிறார்.இதுகுறித்து பொதுக்குழுவில் அவர் பேசியுள்ளதாவது:

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் இருக்கின்றன. அதனால், வழக்கத்தைவிட அதிகமாக, தி.மு.க.,வுக்கு எதிராக, தி.மு.க., அரசுக்கு எதிராக, அவதுாறு அம்புகளை மக்கள் மத்தியில் எதிராளிகள் வீசுவர்.

கருத்துக்கணிப்பு என்ற பெயரில், மக்கள் மனதில் பொய்யை விதைக்க முயற்சிப்பர்; சமூக ஊடகங்கள் வாயிலாக விதைப்பர். இதையெல்லாம் முறியடிக்க, நாம் தயாராக வேண்டும். அவர்களைவிட, ஒரு படி முன்னால் இருக்க வேண்டும். அவர்களது பொய்களுக்கு முன்னால், நம் உண்மை மக்களிடம் சென்று சேர வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us