Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூருவை சேர்ந்தவர் இயக்கிய குறும்படம் 6 திரைப்பட விழாக்களுக்கு தேர்வு

பெங்களூருவை சேர்ந்தவர் இயக்கிய குறும்படம் 6 திரைப்பட விழாக்களுக்கு தேர்வு

பெங்களூருவை சேர்ந்தவர் இயக்கிய குறும்படம் 6 திரைப்பட விழாக்களுக்கு தேர்வு

பெங்களூருவை சேர்ந்தவர் இயக்கிய குறும்படம் 6 திரைப்பட விழாக்களுக்கு தேர்வு

ADDED : ஜூலை 12, 2024 11:15 AM


Google News
Latest Tamil News
பெங்களூரை சேர்ந்த நேத்ரா குருராஜ் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துக்கொண்டு இருக்கிறார். நியூயார்க் பிலிம் அடாகமியில் ஒளிப்பதிவு துறையில் மாஸ்டர் டிகிரி பெற்றவர் நேத்ரா. பல்வேறு குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை வீடியோக்கள் எடுத்த அனுபவம் நேத்ராவுக்கு உண்டு. எழுத்து, இயக்கம், தயாரிப்பு வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் இருந்த அனுபவமே அவரை ஒளிப்பதிவாளராக உயர்த்தியது.

அவர் இயக்கிய குறும்படம் ஒன்று 6 திரைப்பட விழாக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது, இதனால் நேத்ராவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதன் அனுபவம் பற்றி அவரே கூறுகிறார்

1. சிறு வயதிலிருந்தே பாரம்பரிய நடன கலைஞர்; படித்தது அறிவியல், இப்போது புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர். இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி இருக்கின்றன?


மாற்றங்கள் வளர்ச்சிக்கு தேவையானது தான். பெற்றோர் ஊக்கப்படுத்தியதால், சிறு வயதிலேயே நான் பரதநாட்டிய கலையை கற்றுக்கொண்டேன். உயர் கல்வி படிப்பை முடித்த பிறகு, ஒளிப்பதிவு துறையை தேர்ந்தெடுத்தேன். எனது பல வருட நடன அனுபவத்துடன் ஒளிப்பதிவு கலையை கற்றுக்கொண்டது புது அனுபவமாக இருந்தது. ஒளிப்பதிவில் கத்துக்குட்டியாக இருக்கும் நான், என்னுடைய திறமைகளை கொண்டு, வெள்ளித்திரையில் பிரமிக்க வைக்கும் விஷயங்களை செய்து, இந்த உலகத்துக்கே காட்டுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

2. இயக்குனரின் கருத்தை பாதிக்காமல், ஒளிப்பதிவாளராக உங்களுடைய கண்ணோட்டத்தை எழுத்து மூலம் எப்படி அவருக்கு புரிய வைப்பீர்கள்?


ஒன்றை படித்தால், அதை கற்பனை செய்யும் திறன் இயல்பாகவே மனிதர்களுக்கு இருக்கிறது. எழுத்தில் எந்த பிழையும் இல்லாமல் சரியாக கொடுப்பது தான் சவாலான விஷயம். கடந்த 2 ஆண்டுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒளிப்பதிவாளராக பணிப்புரிந்த போது, வெள்ளித்திரையில் இயக்குனர்களின் எதிர்ப்பார்ப்புகளை புரிந்துக்கொண்டேன். கேமரா, லென்ஸ், லைட்டிங் இவை அனைத்திலும் எப்படி மாயாஜாலம் செய்ய முடியும் என கற்றுக்கொண்டேன்.

Image 1291448

3. ஒளிப்பதிவாளராக, திரைக்கதைக்கான காட்சி மொழியை உருவாகும் பொறுப்பு உங்களுடையது, அதன் செயல்முறையை விளக்க முடியுமா?


ஒளிப்பதிவாளர்கள் பெரும்பாலும் தொழில்நுட்ப வல்லுநர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். உண்மையில் நாங்கள் கலைஞர்கள். வெள்ளித்திரையில் பார்க்கும் காட்சிகளுக்கு அழகு சேர்க்கும் விதமாக, கற்பனை திறமைகளை புகுத்தியும், தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொண்டு செயல்பட வேண்டியுள்ளது. ஒவ்வொரு கதைக்கும் ஒரு காட்சிமொழி இருக்கும். அதற்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்ய வேண்டி இருக்கும். இதுவரை நான் ஒளிப்பதிவு செய்த படங்களை பார்த்தால், அவை ஒவ்வொன்றும் வேறொரு நபரால் காட்சிப்படுத்தப்பட்டவையாக தோன்றாலாம். ஆனால் திரைக்கதைக்கு ஏற்ப, தேவையான ஒளிப்பதிவு செய்து இருப்பது நான் தான்.

4. படப்பிடிப்பின் போது சவாலான தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டு இருக்கிறதா? அதை எப்படி கையாண்டீர்கள்?


கேமரா, லைட்டு போன்ற தொழில்நுட்பங்கள் சரியாக இயங்கினால் மட்டுமே ஒரு படத்தை சரியாக எடுக்க முடியும். சில நேரங்களில் வெவ்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும். லைட்டிங் பிரச்சனை, பவர் கட், கேமரா கோளாறுகள் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் இந்த பிரச்னைகளுக்கு உடனடி தீர்வுகள் எடுக்கும் அளவுக்கு குழு திறமையாக இருந்தால், சீக்கிரம் சரி செய்துவிடலாம். ஒளிப்பதிவாளராக மட்டுமில்லாமல் தொழில்நுட்ப கோளாறு வந்தால் அதை செய்யவும் தெரிந்து இருக்க வேண்டும்.

5. இதுவரை உங்களுடைய மிகவும் ஆக்கப்பூர்வமான, நிறைவான படைப்பு எது? ஏன்?


சிறு வயதில் என் பாட்டி சொன்ன ஒரு கதையை வைத்து, ஜாஸ்மின் ப்ளவர்ஸ் என்ற குறும்படத்தை இயக்கினேன். அதற்கு பெரிய வெற்றி கிடைத்தது. அதில் இருந்து எழுதுவது, அதை காட்சிப்படுத்துவது, திரையில் காட்டுவது இப்படி பல பணிகளை கற்றுக்கொண்டேன்.

6. எழுத்து, இயக்கம், தயாரிப்பு வடிவமைப்பு தவிர நேத்ராவுக்கு வேறு என்ன திறமைகள் இருக்கிறது ?


படப்பிடிப்பு, ஒளிப்பதிவு துறையின் துவக்கத்தில் தான் நான் இருக்கிறேன். பல வல்லுநர்களுடன் பணிப்புரிந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதன் மூலம் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டேன். தரமான ஒளிப்பதிவு மூலமே கதையை சொல்வது, மேலும் அதன் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். திரைக்கதை எழுதுவதில் அதிக முயற்சி எடுத்து வருகிறேன், அதன் மூலம் என் சொந்த கதைகள் வைத்தே நான் ஒளிப்பதிவு செய்யலாம் என முடிவு செய்திருக்கிறேன்.

Image 1291447

7. 6 திரைப்பட விழாக்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் குறும்படமான “ஜாஸ்மின் ப்ளவர்ஸ்” பற்றி சொல்லுங்கள்.


லட்சுமி என்ற வயதான இந்திய பெண்ணின் கதை பற்றி தான் இந்த குறும்படம். விதவையான அவர், அழைக்கப்படாத ஒரு திருமணத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சந்திக்கும் நிராகரிப்பு, அவமானங்கள் அதிகம். அதை எதிர்க்கொண்டு எப்படி

வாழ்க்கையை அழகாக மாற்றுகிறார் என்பதை பற்றியது தான் இந்த குறும்படம். கலிபோர்னியா, லாஸ் வேகாஸ், மெல்போர்ன், பூனே, டெல்லி என 6 திரைப்பட விழாக்களுக்கு இந்த குறுப்படம் தேர்ந்தக்கப்பட்டது. கான் திரைப்பட விழா வரை போக வேண்டும் என்பதே எனது லட்சியம்.

8. இந்திய சமூகத்தில் ஒரு விதவை சந்திக்கும் சவால்கள் பற்றி எழுத உங்களுக்கு தூண்டியது யார்?


என் பாட்டியை மனதில் வைத்து தான் இந்த கதை எழுத ஆரம்பித்தேன். என் தாத்தா மறைவுக்கு பிறகு பாட்டி சந்தித்த சவால்களை என்னிடம் கூறியுள்ளார். பிற்போக்கு சிந்தனையுடைய மக்களை எதிர்க்கொண்டு அவர் நிம்மதியாக இருக்கவும் கற்றுக்கொண்டார். சிறுவயதியில் இருந்தே இந்த கதைகள் எனக்கு தெரியும். இப்போது திரைப்படம் மூலம் பாட்டியின் கதையை உலகுக்கு கொண்டு வந்து இருக்கிறேன். இதன் மூலம் சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டால் எனக்கு மிகவும் சந்தோஷம்.

9. உலகம் முழுவதும் நடக்கும் இந்த திரைப்பட விழாக்களுக்கு தேர்வானது, என்ன உணர்வை தருகிறது?


உலக அளவில் என் குறும்படம் திரையிடப்பட்டது எனக்கு மிகவும் ஊக்கமாக இருந்தது. அதை உற்சாகப்படுத்திய மக்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். லட்சுமியின் குறும்படத்தை மேலும் அடுத்த பயணத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நேரமும் வந்துவிட்டது என்பதை இது உணர்த்துகிறது.

Image 1291449

10. உங்களின் முதல் திரைப்படான லோடஸ் பற்றி கூறுங்கள். குறும்படத்தை விட திரைப்படத்தை எடுத்த அனுபவம் எப்படி இருந்தது ?


ஊழல் செய்யும் கடவுளுக்கும், அவனுடைய நல்லொழுக்கமுள்ள ஒருவருக்கும் இடையேயான உறவை சொல்லும் கதை தான் லோடஸ். தொழில்நுட்ப பிரிவுக்கு தலைமை ஏற்றுதான் இந்த படத்தில் என் பயணத்தை தொடங்கினேன், ஆனால் அதை தொடர்ந்து ஒளிப்பதிவாளராக படத்தையே எடுத்துவிட்டேன். அதற்கு என்னுடைய குழுவுக்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டு இருக்கிறேன். குறும்படம் படப்பிடிப்புக்கு 4-5 நாட்கள் போதுமானது. ஆனால் திரைப்படம் எடுக்க 15-20 நாட்கள் தேவைப்பட்டது. அதற்கான பொருட்செலவு, நேரச்செலவு எல்லாமே அதிகம். இரண்டு பணிகளிலுமே எனக்கு ஆர்வம் இருந்தது. என்னுடைய பணிகளை சிறப்பாக முடித்த திருப்தி எனக்கு இருக்கிறது.

11. உங்களின் வரவிருக்கும் அடுத்த படைப்பை பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம், அது ஒரு வெப் சீரிஸ் மற்றும் புகழ்பெற்ற நெட்வர்க்கின் கீழ் வரவிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது, அதை பற்றி எங்களுக்கு கூற முடியுமா?


படத்துக்கு தயாரிப்பு தரப்பில் சிக்கல் இருப்பதால், தற்போது அந்த பணி கிடப்பில் இருக்கிறது.

12. தி ஆஸ்கார் வழங்கும் அகாடமி கோல்ட் ரை சிங் புரோகிராமில் உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருப்பது எவ்வளவு உற்சாகத்தை உங்களுக்கு அளித்துள்ளது?


படப்பிடிப்பையும், ஒளிப்பதிவையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒளிப்பதிவு துறையில், தென்னிந்தியாவில் இருந்து பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பது பெருமைக்குறியது. இந்த கோல்ட் ரைசிங் திட்டம் டிஸ்னி, டபிள்யூபி, போன்ற முக்கிய தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. என்னுடைய குறிக்கோள் இந்த நிறுவனங்கள் ஒன்றில், இந்த புரோகிராம் கொண்டு செயல்படுத்துவது தான்.

13. ஒளிப்பதிவாளர் ஆக விரும்பும் ஒருவருக்கு நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன?


திரைப்பட உருவாக்கம் என்பது கலையின் மிகப்பெரிய விஷயம். ஒரு ஒளிப்பதிவாளர், கலைஞரைப் போல படிக்கவும், சிந்திக்கவும், திட்டமிடவும் மற்றும் செயல்படுத்தவும் தெரிய வேண்டும். அதற்கு திட்டம் இருந்தால், கேமராவோ, போனோ எடுத்து அந்த கதைக்கு அழகு சேர்க்கும் வகையில் காட்சிப்படுத்த பழக வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us