டாஸ்மாக்கில் ஊழலை அனுமதிக்கக்கூடாது; உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு
டாஸ்மாக்கில் ஊழலை அனுமதிக்கக்கூடாது; உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு
டாஸ்மாக்கில் ஊழலை அனுமதிக்கக்கூடாது; உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு
ADDED : மே 28, 2025 05:16 AM

மதுரை: டாஸ்மாக் முறைகேடு குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விற்பனையாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
இந்த வழக்கில், டாஸ்மாக் துறையில் எந்த ஊழலையும் அனுமதிக்கக்கூடாது. துறை தனது தவறை உணர வேண்டும்,' என்றும் நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.
மதுரை மாயகண்ணன், முருகன், ராமசாமி தாக்கல் செய்த மனு: டாஸ்மாக் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். டாஸ்மாக் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் பேட்டியளித்த குற்றச்சாட்டின் பேரில் எங்களை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டார். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: மதுரை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணிபுரிந்து வந்த ராஜேஸ்வரியும், திருமங்கலம் டாஸ்மாக் மேற்பார்வையாளர் செல்வமும் சேர்ந்து டாஸ்மாக் கடைகளில் மாமூல் வசூலித்து வந்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பப்பட்டது. அந்த புகார் மேல் நடவடிக்கைக்காக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காததால் ஊடகங்களுக்கு சென்றோம்.
அரசு தரப்பு: லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய புகாரை, முதுநிலை மண்டல மேலாளர் விசாரிக்க, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனுப்பினார். அவர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் மனுதாரர்களிடம் விசாரணை நடத்தி முறைகேடு புகார் நிரூபிக்கப்படவில்லை என அறிக்கை அனுப்பியுள்ளார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
ஏதோ தவறு இருக்கிறது
நீதிபதி: மனுதாரர்கள் மாவட்ட மேலாளராக பணிபுரிந்த ராஜேஸ்வரி, மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோரின் உரையாடல்களையும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பிய புகாரில் இணைத்துள்ளனர். மனுதாரர்கள் ஊடகங்களுக்கு சென்றது நன்னடத்தை மீறல் தான். அதே நேரத்தில் புகாருக்கு ஆளான ராஜேஸ்வரி, தாய் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். கிடைத்துள்ள ஆவணங்கள் துறையில் ஏதோ தவறு இருப்பதைக் காட்டுகின்றன. சட்டவிரோத மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டு அரசால் டாஸ்மாக் நடத்தப்படுகிறது. அந்த துறையில் எந்த ஊழலையும் அனுமதிக்கக்கூடாது. துறை தனது தவறை உணர வேண்டும். மனுதாரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு உரிமை வழங்கி மனுதாரர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.