அவமரியாதையை எளிதில் கடந்து போக முடியாது: காங்., ஜோதிமணி
அவமரியாதையை எளிதில் கடந்து போக முடியாது: காங்., ஜோதிமணி
அவமரியாதையை எளிதில் கடந்து போக முடியாது: காங்., ஜோதிமணி
ADDED : செப் 25, 2025 02:46 AM
சென்னை: கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவி கவிதா, தி.மு.க.,வில் இணைந்ததாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் சமூக வலைதள பக்கத்தில், தகவலுடன் புகைப்படத்தை பகிர்ந்தார்.
அதைத் தொடர்ந்து, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையது வெளியிட்ட அறிக்கையில், 'கரூர் மகளிர் அணி காங்கிரஸ் தலைவி பதவியில் கவிதா இல்லை' என குறிப்பிட்டதும், அப்பதிவை செந்தில் பாலாஜி நீக்கினார்.
இது தொடர்பாக, கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை:
கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். தி.மு.க., மாவட்டச்செயலர், முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதிப்பதை, நாங்கள் எப்படி புரிந்து கொள்வது.
கூட்டணியின் பெயரால், இது போன்ற அவமரியாதையை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்த சூழலிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது.
இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய காங்கிரஸ் கட்சியின் சுய மரியாதையை காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது. அவமரியாதையை எளிதில் கடந்து போய் விட முடியாது.
கூட்டணிக்குள் இது போன்ற கசப்பான சம்பவங்கள், இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை எடுத்து செல்வார் என நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.