Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்: காங்., செயற்குழுவில் 'வாய்ஸ்' எழுப்ப திட்டம்

தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்: காங்., செயற்குழுவில் 'வாய்ஸ்' எழுப்ப திட்டம்

தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்: காங்., செயற்குழுவில் 'வாய்ஸ்' எழுப்ப திட்டம்

தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்: காங்., செயற்குழுவில் 'வாய்ஸ்' எழுப்ப திட்டம்

UPDATED : செப் 26, 2025 05:19 AMADDED : செப் 26, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
தி.மு.க., கூட்டணியில், ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கேட்பது தொடர்பாக, நாளை மறுநாள் நடைபெற உள்ள தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றவும், தனித்தனியே நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, டில்லி மேலிடத்திற்கு அறிக்கை அளிக்கவும், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திட்டமிட்டுஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தலில், 'ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகளில் போட்டி' என, தமிழக காங்., முன்னணி தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த கோரிக்கைகளுக்கு தி.மு.க., தலைமை சம்மதிக்காவிட்டால், ஆட்சியில் பங்கு தருவதாக கூறும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்., கூட்டணி அமைக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, இதை மறுத்து வருகிறார். இதனால், தி.மு.க., ஆதரவு, விஜய் ஆதரவு என, கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகி உள்ளன.

அதிருப்தி விஜய் ஆதரவு அணியில் தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டத் தலைவர்கள் என பலர் உள்ளனர். மேலும், தமிழகம் முழுதும் தி.மு.க., மீது அதிருப்தியில் உள்ள காங்கிரசாரும், விஜய் ஆதரவு அணி தலைவர்களுக்கு ஆதரவாக செயல்பட துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், வரும் 28ல், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செயற்குழு கூட்டம் நடக்கிறது.

அதில், 'கூட்டணி ஆட்சி, அதிக தொகுதிகள் குறித்து யாரும் பேசக் கூடாது' என தீர்மானம் நிறைவேற்ற , தி.மு.க., ஆதரவு காங்., தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதேநேரம், செயற்குழு உறுப்பினர்களிடம், கூட்டணி குறித்து தனித்தனியாக கருத்து கேட்டு டில்லி மேலிடத்திற்கு அறிக்கை அளிக்குமாறு, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் விஜய் ஆதரவு அணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழக காங்கிரசில், கூட்டணி முடிவை எதிர்த்து, மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி உள்ளிட்டோர் தனிக்கட்சி துவங்கியது போல, மாற்று கருத்துக்கு இடம் அளிக்காவிட்டால், தற்போது விஜய் ஆதரவு அணி தலைவர்களாக இருக்கும் சிலர், தங்கள் ஆதரவாளர்களுடன் தனிக்கட்சியை துவங்கவும் ஆலோசனை நடத்துகின்றனர்.

தி.மு.க., தலைமையின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரசார் பலரும், இந்த முறை கூட்டணி ஆட்சி ஒப்பந்தத்தை காங்கிரஸ் தவறவிட்டால், அதன் பிறகு, கனவிலும் அதை எதிர்பார்க்க முடியாது என கூறுகின்றனர்.

நெருக்கடி இதனால், வரும் 28ம் தேதி சென்னையில் நடக்கும் செயற்குழு கூட்டத்தில், எந்த கூட்டணியாக இருந்தாலும், ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்த, பெரும்பாலான நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

செயற்குழு கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக பொதுவாக கருத்து கேட்டால், விஜயுடன் கூட்டணி சேர வேண்டும் என வலியுறுத்துவோர் குறித்த தகவல்களை, தி.மு.க., கூட்டணியை வலியுறுத்தும் தலைவர்கள், தி.மு.க., மேலிடத்துக்கு கொண்டு செல்லக்கூடும்.

இதனால், வரும் தேர்தலில், இதே கூட்டணி தொடர்ந்தால் சம்பந்தப்பட்டவர்களை புறக்கணிக்கும் வகையில், தி.மு.க., தலைமை திட்டமிட்டு, அவர்களுக்கு சாதகமான காங்., தொகுதிகளை பறித்துவிடலாம்.

மேலும், விஜய் ஆதரவு அணியினருக்கு, தி.மு.க., தரப்பில் இருந்து வேறு வகையிலும் நெருக்கடி வரக்கூடும். அதனாலேயே, செயற்குழு கூட்டத்தில் தனித்தனியாக கருத்துக்கேட்பு நடத்த வேண்டும் என, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம், வலியுறுத்தி உள்ளனர்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us