மிரட்டி பணம் பறிப்பது சைபர் குற்றங்களில் முதலிடம்
மிரட்டி பணம் பறிப்பது சைபர் குற்றங்களில் முதலிடம்
மிரட்டி பணம் பறிப்பது சைபர் குற்றங்களில் முதலிடம்
ADDED : செப் 24, 2025 03:50 AM
சென்னை:'மக்களை மிரட்டி பணம் பறிப்பது, சைபர் குற்றங்களில் முதலிடத்தில் உள்ளது' என, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து சைபர் குற்றவாளிகள், 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்வது, பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காலத்திற்கு ஏற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, சைபர் குற்றங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. சைபர் குற்றவாளிகள், பொது மக்களின் ஆதார் எண், அலைபேசி எண், வங்கி கணக்கு எண் போன்ற விபரங்களை முன் கூட்டியே திரட்டி விடுகின்றனர்.
பொது மக்களை, அலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்பு கொள்ளும் போது, அவர்கள் தெரிவிக்காமலே, தங்களிடம் இருக்கும் தகவல்களை தெரிவித்து, பொது மக்களின் நம்பிக்கையையும் பெற்று விடுகின்றனர். இதன் வாயிலாக, ஒ.டி.பி., எண்களை பெற்று, பண மோசடி செய்து விடுகின்றனர். அத்துடன், போதை பொருள் கடத்தல் உட்பட ஏதேனும் வழக்கில் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளதகக் கூறி மிரட்டியும், 'ஆன்லைன்' வாயிலாக டிஜிட்டல் கைது செய்தும், பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தில் ஏழு மாதங்களில், 1,015 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக, 780 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் தமிழகத்தில் நடக்கும் சைபர் குற்றங்களை ஆய்வு செய்ததில், முதல் 10 வகையான குற்றங்களில், மிரட்டி பணம் பறிப்பது முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.