Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ '2026ல் பா.ஜ., ஆட்சி என்றுதான் சொன்னேன்' அண்ணாமலை ஒப்புதல்

'2026ல் பா.ஜ., ஆட்சி என்றுதான் சொன்னேன்' அண்ணாமலை ஒப்புதல்

'2026ல் பா.ஜ., ஆட்சி என்றுதான் சொன்னேன்' அண்ணாமலை ஒப்புதல்

'2026ல் பா.ஜ., ஆட்சி என்றுதான் சொன்னேன்' அண்ணாமலை ஒப்புதல்

ADDED : ஜூன் 13, 2025 05:26 AM


Google News
Latest Tamil News
கோவை: தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மத்தியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்று 11 ஆண்டு நிறைவடைந்த நிலையில், பா.ஜ., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், பொது சிவில் சட்டத்தை தவிர அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

புகார் இல்லை


அந்த சட்டமும் விரைவில் நிறைவேறும். 11 ஆண்டுகளில் எவ்வித ஊழல் புகாரும் எழவில்லை.

அமலாக்கத்துறை செயல்பாட்டால் 1.45 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற வர்களையும் பிடித்து விசாரித்து வருகிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 1.25 லட்சம் கோடி காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 12 கோடி வீடுகளுக்கு நேரடி குடிநீர் வசதி தரப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 11 அரசு மருத்துவக் கல்லுாரிகளை நிறுவியுள்ளது. 25 கோடி மக்கள் வறுமைக்கோட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் இளைஞர்கள் 'அக்னிவீர்' திட்டத்தில் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்துக்கு நான்கு ஆண்டுகளில் 4 லட்சத்து 36 ஆயிரம் கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. தமிழகத்துக்கு வழங்கிய நிதியையும் சேர்த்து, மொத்தம் 5 லட்சத்து 46 ஆயிரம் கோடி ருபாய் வழங்கி உள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன் அளித்த 512 வாக்குறுதிகளில், 50 வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை.

பிளவு இல்லை


'விஸ்வகர்மா' திட்ட பெயரை மாற்றி, தி.மு.க., அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தது; முதல்வர் மருந்தகம் திட்டத்தையும் கொண்டு வந்தது. இரண்டு திட்டங்களுமே தோல்வியை தழுவி உள்ளன.

கீழடி ஆய்வை பொறுத்தவரை, போதுமான தகவல்களையும் சந்தேகங்களையும் தீர்க்க, தி.மு.க., அரசு தவறி விட்டது. ஆய்வாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தால், இந்த ஆய்வறிக்கை ஏற்கப்பட்டிருக்கும்.

வரும் 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என தலைவர்கள் சொன்னாலும், நான் பா.ஜ., ஆட்சிதான் என சொன்னேன். தலைவர்கள் கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள்; தொண்டனாக நான் தொடர்ந்து பணியாற்றுவேன். எங்களுக்குள் எவ்வித பிளவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

'துாய்மை பணியாளர்களுடன் இணைந்து போராடுவேன்'

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், சாக்கடை அடைப்பு நீக்குவோர், பணி நிரந்தரம் கோரி, கலெக்டர் அலுவலகம் முன், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை, அண்ணாமலை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, அவர்களிடம், 'கொரோனா பரவிய காலத்தில் நீங்கள் பணியாற்றியது அனைவருக்கும் தெரியும். உங்களை பணி நிரந்தரம் செய்து தருவதாக, தேர்தல் வாக்குறுதி கொடுத்தே, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அரசாணைப்படி, குறைந்தபட்ச தினக்கூலியாக, 770 ரூபாய் வழங்க வேண்டும்; அவ்வாறு தருவதில்லை. இரண்டு நாட்கள் காத்திருப்போம். அதற்குள் போராட்டம் முடிவுக்கு வராவிட்டால், பா.ஜ.,வும் பங்கேற்கும். உங்களுடன் அமர்ந்து நானும் போராட்டத்தில் ஈடுபடுவேன்' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us