எங்களை முருகன் வேல் காக்கும் சேகர்பாபு நம்புகிறார்
எங்களை முருகன் வேல் காக்கும் சேகர்பாபு நம்புகிறார்
எங்களை முருகன் வேல் காக்கும் சேகர்பாபு நம்புகிறார்
ADDED : ஜூன் 13, 2025 05:25 AM
சென்னை: சென்னையில் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:
அறநிலையத் துறை சார்பில், கடந்தாண்டு பழனியில் நடத்தப்பட்ட அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவுதான், மதுரையில் ஹிந்து அமைப்புகள் சார்பில் முருகனுக்கு மாநாடு நடத்துகின்றனர்.
எங்களுடைய பணி, மதம் சார்ந்து மக்களைப் பிரிப்பதில்லை. எந்த மதத்தினராக இருந்தாலும், அவரவர்கள் விரும்புகின்ற வழியில், விரும்புகின்ற தெய்வங்களை வழிபட முழு சுதந்திரம் உள்ளது. இந்த அரசு, யாரையும் எங்கும் தடுக்கவில்லை.
மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களை, மக்கள் வரும் தேர்தலிலும் புறக்கணிப்பர்.
எந்த விஷயத்திலும் பொருளோ, முழுமையோ கிடையாது. யாரோ எழுதிக் கொடுத்து சொல்வதையும், காற்று வாக்கில் வருவதையும் உள்வாங்கி எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிக்கை விடுகிறார்.
திராவிட மாடல் ஆட்சி நடத்தும் நாயகன் முதல்வர் ஸ்டாலினை, முருகபெருமானே விரும்புகிறார். காரணம், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றபின் இதுவரை நடத்தப்பட்ட 3,109 கோவில் கும்பாபிஷேகங்களில், 117 கோவில்கள் முருகப் பெருமான் கோவிலாகும்.
மேலும், 872.62 கோடி ரூபாயில் பழனி, திருச்செந்துார், சிறுவாபுரி, மருதமலை, குமாரவயலுார், காந்தல் ஆகிய முருகன் கோவில்களில் திருப்பணிகளும், அறுபடை வீடு மற்றும் அறுபடை வீடு அல்லாத முருகன் திருக்கோவில்களில், 1,085 கோடி ரூபாயில், 884 திருப்பணிகளும் நடந்து வருகின்றன.
இதுபோன்ற, பணிகளை இதற்கு முன் நடந்த அரசுகள் செய்யவில்லை. முருகன் கையிலே இருக்கின்ற வேல் எங்களை நிச்சயம் காக்கும். அடுத்தும் தி.மு.க.,வே ஆட்சிக்கு வரும்.
தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரனுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான், பார்ப்பவரையெல்லாம், கூட்டணிக்கு வாங்கன்னு கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார். தி.மு.க., கூட்டணி யில் எந்த சலசலப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.