அந்த சில நிமிடங்களில்... சாவை நேரில் கண்ட சாட்சிகள் பேட்டி
அந்த சில நிமிடங்களில்... சாவை நேரில் கண்ட சாட்சிகள் பேட்டி
அந்த சில நிமிடங்களில்... சாவை நேரில் கண்ட சாட்சிகள் பேட்டி

நமது நிருபர்
த.வெ.க., தலைவர் விஜய், கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட அசம்பாவிதத்தின்போது நடந்தது என்ன?நேரில் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர்.
'சந்தேகம் வருதுங்க'
ரவி, பரமத்தி: இரவு 7 மணிக்கு விஜய் வந்து விட்டார். கை காட்டவோ எதுவும் செய்யவோ இல்லை. ரோடுஷோ நடத்த அனுமதி இல்லை. ரோடு அகலம் குறைவு. இந்தப்பக்கம் 15 அடி, அந்தப்பக்கம் 15 அடி. அதிலும் 5 அடி தடுப்பு வைத்து விட்டனர். 10 அடியில்தான் மக்கள் நிற்கின்றனர்.
'இரு தரப்பும் பொறுப்பேற்கணும்'
தியாகராஜன் கரூர்: பிடித்தவர்களை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுவது இயல்பு. கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. விஜய் கால் மணி நேரம் பேசியிருப்பார். விளக்கும், ஆடியோவும் கட் ஆகி விட்டன.
'உண்மையை கண்டறியணும்'
தினேஷ், கரூர்: மக்கள் தண்ணீர் கேட்டதும் விஜய் பாட்டில்களை வீசினார். ஒவ்வொருத்தராக மயக்கம் போட ஆரம்பித்தனர். நான் கிளம்பி வீட்டுக்குச் சென்றேன். பாதி வழியிலேயே வீட்டில் இருந்து போன் வந்தது. கூட்டத்தில் சிலர் இறந்து விட்டதாக தகவல் வந்தது. அரை மணி நேரத்துக்குள் எப்படி அவ்வளவு உயிரிழப்பு எனத் தெரியவில்லை.
'சனிக்கிழமையை தவிர்த்திருக்கலாம்'
ரமேஷ்குமார், கரூர்: விஜய் வருவதற்கு முன், இளைஞர்கள் கொடியோடு ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர். விஜய் வந்ததும், அங்கிருந்த கூட்டம், இங்கு குவியத் தொடங்கி, தள்ள ஆரம்பித்தனர். நானும், மனைவியும் வெளியேறி, வீடு திரும்பி விட்டோம். ஒரு ஸ்கிரீன் அமைத்து ஒளிபரப்பி இருக்கலாம். நிறைய பேர் மரத்தில் ஏறியதால், அது முறிந்து விழுந்தது.
'இட வசதி போதவில்லை'
ராஜேஸ்வரி, கரூர்: இங்கு நின்றிருந்த கூட்டத்துடன், விஜய் வேனுக்குப் பின்னால் வந்த கூட்டமும் சேர்ந்து கொண்டதால், நெரிசல் அதிகரித்தது. வெளியே செல்ல இங்கு இடம் இல்லை. இதுவரை இங்கு இதுபோன்று நடந்ததில்லை; அந்த சில நிமிடங்களில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. இடவசதி போதவில்லை.
'இந்த முறை ஆட்சி மாறணும்'
ஜீவானந்தம், கரூர்: வந்தது சினிமா ரசிகர்களாவே இருக்கட்டும். போலீஸ் தடியடி நடத்தினால் நாங்கள் வாங்க வேண்டுமா. நாங்களும் மைக் கட்ட வேண்டுமல்லவா. தி.மு.க.,வுக்கு மட்டும் தெளிவாக செய்கிறீர்களே, நாங்கள் செய்யக்கூடாதா. இதுவரைக்கும் தி.மு.க.,வுக்குத்தான் ஓட்டுப்போட்டேன். இந்த முறை ஆட்சி மாறணும். 2026ல் விஜய் கண்டிப்பாக ஆட்சிக்கு வரணும். விஜய்க்கு எவ்வளவு வருத்தம் இருக்கும் என அவருக்குத்தான் தெரியும்.
'கால் வைக்க இடமில்லை'
கேசவன், வேலுசாமிபுரம், கரூர்: கூட்டம் நடத்தும் அளவுக்கு இது விசாலமான இடம் கிடையாது. தி.மு.க., முப்பெரும் விழா நடத்திய இடத்தில் 50 ஏக்கர் உள்ளது. அங்கு நடத்தியிருக்கலாம். விஜய்க்கு இடம் கொடுக்கவில்லை என்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. இந்த அளவுக்கு கூட்டம் வரும் என விஜய் எதிர்பார்த்திருக்க மாட்டார். காவல்துறை கணித்திருக்க வேண்டும்.
'பாதுகாப்பு குறைவை ஒளிபரப்பி இருக்கலாம்'
கேசவன், ஆத்துார்: காலையில் இருந்தே ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் இருந்தனர். மாலை நேரத்தில் வேலையில் இருந்து திரும்பியவர்கள் வீட்டுக்குச் செல்லாமல், இங்கேயே நின்று விட்டனர். இதனால், கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது.


