சிறைகளில் 'ஒதுங்க' இடமின்றி பரிதவிக்கும் காவலர்கள்; கைதிகளின் கழிப்பறைகளை பயன்படுத்தும் பரிதாபம்
சிறைகளில் 'ஒதுங்க' இடமின்றி பரிதவிக்கும் காவலர்கள்; கைதிகளின் கழிப்பறைகளை பயன்படுத்தும் பரிதாபம்
சிறைகளில் 'ஒதுங்க' இடமின்றி பரிதவிக்கும் காவலர்கள்; கைதிகளின் கழிப்பறைகளை பயன்படுத்தும் பரிதாபம்

மதுரை:தமிழக சிறைகளில் காவலர்களுக்கென தனி கழிப்பறை வசதி இல்லாததால் 'அவசரத்திற்கு' கைதிகளின் கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய பரிதாபத்தில் உள்ளனர். பெரும்பாலும் திறந்தவெளியைதான் பயன்படுத்துவதாக புலம்புகின்றனர்.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உள்ளன. ஒவ்வொரு சிறையிலும் 11 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை வீதம் 600 முதல் 700 கழிப்பறைகள் உள்ளன. இரவில் மட்டும் பயன்படுத்த ஒவ்வொரு 'பிளாக்'கிலும் ஒரு கழிப்பறை உண்டு.
இவர்களை 24 மணி நேரமும் காவலர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். இவர்களுக்கு சிறை வளாகத்தில் கழிப்பறை வசதி இல்லை. கைதிகள் பயன்படுத்தும் கழிப்பறை அல்லது அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். சில காவலர்கள் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். சிறைத்துறையை நவீனமாக்கப்பட்டு வரும் நிலையில் காவலர்களுக்கு அடிப்படை தேவையான கழிப்பறை வசதி இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவலர்கள் கூறியதாவது: ஒவ்வொரு 'பிளாக்' அருகிலும் 60 கழிப்பறைகள் வரை அமைக்கப்பட்டுள்ளன. இப்படி சிறை முழுவதும் ஆங்காங்கே கைதிகளுக்கு இவ்வசதி உள்ளது. ஆனால் எங்களை பற்றி சிறைத்துறை கவனத்தில் கொள்ளவில்லை.
அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றால் 'கட்டம்' கட்டப்படுவோம் என பயந்து நாங்கள் சொல்வதில்லை. 'அவசரத்திற்கு' கைதிகளின் கழிப்பறையை பயன்படுத்தி வருகிறோம். அல்லது திறந்தவெளியை பயன்படுத்துகிறோம். எங்களுக்கென பிரத்யேக கழிப்பறைகள் அமைக்க போதிய இடவசதி உள்ளது. இதுகுறித்து சிறைத்துறை பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.