Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தவிக்கும் மாம்பழ விவசாயிகள்; அமைச்சரும், துறை இயக்குநரும் அமெரிக்கா பயணம்!

தவிக்கும் மாம்பழ விவசாயிகள்; அமைச்சரும், துறை இயக்குநரும் அமெரிக்கா பயணம்!

தவிக்கும் மாம்பழ விவசாயிகள்; அமைச்சரும், துறை இயக்குநரும் அமெரிக்கா பயணம்!

தவிக்கும் மாம்பழ விவசாயிகள்; அமைச்சரும், துறை இயக்குநரும் அமெரிக்கா பயணம்!

ADDED : ஜூன் 24, 2025 12:18 PM


Google News
Latest Tamil News
சென்னை: மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கும் நிலையில், வேளாண் துறை அமைச்சரும், தோட்டக்கலை துறை இயக்குநரும், அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், மாம்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

கொள்முதல் கிலோ ரூ. 4

கடந்த ஆண்டு கிலோ மாம்பழம், 150 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது, 40 ரூபாய்க்கு, வாங்குவதற்கு ஆளில்லை. 3 கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மாம்பழ கூழ் தயாரிக்க பயன்படுத்தும் மாம்பழங்களுக்கும் விலை இல்லை.

கடந்த ஆண்டு 20 முதல் 30 ரூபாய் கொள்முதல் விலையாக இருந்த நிலையில், தற்போது கிலோ 4 ரூபாய் என, ஆலைகள் நிர்ணயம் செய்துள்ளன. தமிழக மாம்பழங்களை கொள்முதல் செய்ய, ஆந்திர ஆலைகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

இதனால், விற்பனையின்றி நாள்தோறும் டன் கணக்கில் மாம்பழங்கள் வீணாகி வருகின்றன; குப்பையிலும், நீர்நிலைகளிலும் கொட்டி அழித்து வருகின்றனர். நடப்பாண்டு பெரிய அளவில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மாம்பழ கூழ் ஆலைகளில் மீண்டும் உற்பத்தியை துவங்கும் பணிகளில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தோட்டக்கலைத் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன் ஆகியோர் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால், இருவரும் சப்தமின்றி அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். வரும் 29ம் தேதி இருவரும் சென்னை திரும்ப உள்ளனர்.

மாம்பழ அறுவடை துவங்கிய நேரத்திலேயே இந்த பிரச்னை எழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்நேரத்தில், தோட்டக்கலைத் துறை இயக்குநர் துபாய் சென்று விட்டார். அறுவடை உச்சகட்டத்தை தொட்டு, பிரச்னை அதிகரித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். தோட்டக்கலை துறை இயக்குநர் தொடர்ந்து தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருப்பதால், அவரை விவசாயிகளால் சந்திக்க முடியவில்லை.

இழப்பீடு வேண்டும்

'கர்நாடக விவசாயிகளுக்கு வழங்குவது போல, தமிழக மாம்பழ விவசாயிகளுக்கும் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: மாம்பழம் விலை சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான குரலாய் அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரியில் கடந்த 20ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், திண்டுக்கலில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.மாம்பழ விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என, இந்த போராட்டங்களின் போது வலியுறுத்தினோம்.

ஆனால், வழக்கம்போல தி.மு.க., அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. வேளாண் துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில், 'பிசி'யாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மத்தியில் கூட்டணியாக 39 எம்.பி.,க்களை வைத்திருந்தும், மாம்பழ விவசாயிகளுக்காக தி.மு.க., குரல் கொடுக்கவில்லை.

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட தி.மு.க., அரசிடம், விவசாயிகள் நலன் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்நிலையில், கர்நாடக மாநில மாம்பழ விவசாயிகளுக்கு, பி.டி.பி.எஸ்., எனப்படும் விலை பற்றாக்குறை செலுத்தும் திட்டத்தின்படி, மத்திய அரசு இழப்பீடு அறிவித்துஉள்ளது.

விவசாயிகள் நலன்காக்கும் நோக்கில், பிரதமர் மோடி அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இத்தகைய இழப்பீட்டை தமிழக விவசாயிகளுக்கும் மத்திய - மாநில அரசுகள் வழங்க வேண்டும். இந்த இழப்பீடு, ஆண்டுக்கு ஒருமுறை விளைவிக்கப்படும் மாம்பழங்களுக்கு ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால், துயரில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அ.தி.மு.க., என்றென்றும் விவசாயிகளுடன் துணை நிற்கும்; அவர்களின் குரலாக என்றென்றும் ஒலிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மாம்பழ விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழக அரசை கண்டித்தும், வரும் 30ம் தேதி காலை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

தமிழக அரசு காக்க வேண்டும்

ஆந்திர மாநில அரசு, மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயித்து, விவசாயிகளை நஷ்டத்திற்கு ஆளாகாமல் காத்துள்ளது. மேலும், அங்குள்ள வியாபாரிகளிடம், பிற மாநில மாம்பழங்களை கொள்முதல் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. அங்குள்ள மாம்பழ ஜூஸ் நிறுவனங்கள், தமிழக மாம்பழங்களை திருப்பி அனுப்புகின்றன. ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற கட்டுப்பாடு இல்லை;
குறைந்தபட்ச ஆதார விலையும் நிர்ணயிக்கவில்லை. இதனால், உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். இழப்பீடு கோரி போராடினாலும் தி.மு.க., அரசு மறுப்பதால், மாம்பழங்களை வீதியில் கொட்டி விவசாயிகள் தவித்து வருகின்றனர். தமிழக விவசாயிகளை காக்கும் வகையில், அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்.- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us