'ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிதாக எந்த உரிமமும் வழங்கவில்லை'
'ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிதாக எந்த உரிமமும் வழங்கவில்லை'
'ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிதாக எந்த உரிமமும் வழங்கவில்லை'
ADDED : பிப் 11, 2024 12:10 AM
சென்னை:'காவிரி டெல்டா பகுதிகளில், 'ஹைட்ரோ கார்பன்' எடுக்க, புதிதாக எந்தவொரு உரிமமும் வழங்கவில்லை' என, தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து, திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
காவிரி டெல்டா பகுதியில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக்கோரி, 2019ல் மார்க்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்'முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வேளாண் அமைச்சகங்களின் செயலர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், '2020ல், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் என்ற சட்டத்தை, தமிழக அரசு இயற்றியுள்ளது.
இச்சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில அரசு உரிமம் வழங்காததால், காவிரி டெல்டா பகுதியில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு என ஒதுக்கப்பட்ட பகுதியில், இதுவரை எந்த பணிகளும் துவக்கப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான பிளீடர் ஏ.எட்வின் பிரபாகர், ''காவிரி டெல்டா பகுதிகளில், இதுவரை ஹைட்ரோ கார்பன் எடுக்க, எந்தவொரு புதிய உரிமமும் வழங்கப்படவில்லை,'' என, விளக்கம் அளித்தார்.
இதைப்பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.