ADDED : மார் 24, 2025 12:50 AM

மார்ச் 24, 1932
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகில் உள்ள கணியூரில், அருணாச்சலம் பிள்ளை - லட்சுமியம்மாள் தம்பதியின் மகனாக, 1932ல் இதே நாளில் பிறந்தவர், கே.ஏ.கிருஷ்ணசாமி.
இவரின் தந்தை, தமிழறிஞர்கள் மற்றும் சுயமரியாதை இயக்கத் தலைவர்களுடன் நெருங்கி பழகினார். அவர்கள் அனைவரும் இவரின் வீட்டுக்கு வந்து சென்றனர். இதனால் இவரும், இவரின் அண்ணன்களான முருகேசன், மதியழகன் உள்ளிட்டோரும் அந்த தலைவர்களுடன் பழகினர். அண்ணா துரை, தி.மு.க.,வை துவக்கிய போது இருந்த ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக, இவரது அண்ணன் மதியழகன் விளங்கினார்.
அது போல, எம்.ஏ., - பி.எல்., படித்து, தி.மு.க.,வின், எம்.பி.,யாக இருந்த இவர், எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை துவக்கியபோது, எம்.ஜி.ஆருக்கு அடுத்து, இரண்டாவது உறுப்பினராக கையெழுத்திட்டார். அ.தி.மு.க.,வின் அமைப்பாளர், அமைப்பு செயலர், துணை பொதுச்செயலர் பொறுப்புகளை வகித்தார். ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு, எம்.ஜி.ஆர்., ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் அமைச்சராக இருந்தார். 'தென்னகம்' என்ற, அ.தி.மு.க., நாளிதழின் ஆசிரியராக பணியாற்றி, கட்டுரைகளை எழுதினார். இவர் தன், 78வது வயதில், 2010, மே 18ல் மறைந்தார்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருக்கு, 'புரட்சித்தலைவர்' என்ற பட்டத்தை வழங்கிய, கே.ஏ.கே., பிறந்த தினம் இன்று!


