பிரதமர் பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம் ரகசியமாக நடத்தப்படுவதால் மக்கள் அதிர்ச்சி
பிரதமர் பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம் ரகசியமாக நடத்தப்படுவதால் மக்கள் அதிர்ச்சி
பிரதமர் பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம் ரகசியமாக நடத்தப்படுவதால் மக்கள் அதிர்ச்சி
ADDED : செப் 24, 2025 08:35 PM
நாடு முழுதும், பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்த, மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், தமிழகத்தில் ரகசியமாக பெயரளவுக்கு முகாம்கள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, 'ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான்' என்ற பெயரில், பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, செப்., 17 முதல் அக்., 2 வரை நடத்த, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில், அனைத்து துணை, ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப் படுகிறது.
பரிசோதனை முகாமில், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு, மார்பக புற்றுநோய், காசநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கான பரி சோதனைகள், கர்ப்பிணி யருக்கான பரிசோதனை கள், சிகிச்சைகள் வழங்கப் படுகின்றன.
அத்துடன், குழந்தை களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்களும் நடத்தப்படுகின்றன. நாடு முழுதும் இம்மருத்துவ முகாம்கள் சிறப்பாக நடந்து வந்தாலும், தமிழகத்தில் பெரிதாக விளம்பரமோ, விழிப்புணர்வோ மக்களிடையே அரசு ஏற்படுத்தவில்லை.
இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ முகாம் நடப்பது, மக்களுக்கு தெரியவில்லை.
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும், 'உங்களுடன் ஸ்டாலின், 'நலம் காக்கும் ஸ்டாலின்' போன்ற திட்டங்களுக்கு விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதுடன், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், முகாம் நடக்கும் விபரம் மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், மத்திய அரசு அறிவுறுத்தியதற்காக நடத்தப்படும் மருத்துவ முகாம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. பெயரளவில் ரகசியமாகவே முகாம் நடத்தப்படுகிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இவ்வாறு அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தவறானது இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
பிரதமர் பிறந்த நாளையொட்டி, மருத்துவ முகாம் நடக்கும் விபரத்தை, முகாம் நடக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருவோருக்கு கூட தெரிவிப்பதில்லை. இதனால் பெரும்பாலானோர் பயன்பெற முடியாத நிலை உள்ளது.
அரசு மக்கள் நலன் கருதி, முகாம் குறித்த விபரங்களை தெரிவிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணி யன் கூறுகையில், ''பிரதமர் பிறந்த நாளையொட்டி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ முகாம் நடந்து வருகிறது.
''சென்னை, சின்ன போரூரில் நடந்த முகாமில், கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனால், மருத்துவ முகாம் நடக்கவில்லை என்பது தவறானது,'' என்றார்.
- நமது நிருபர் -