Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மெரினாவில் முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு மீண்டும் டெண்டர்; திராவிட மாடல் விநோதம் என அன்புமணி விமர்சனம்

மெரினாவில் முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு மீண்டும் டெண்டர்; திராவிட மாடல் விநோதம் என அன்புமணி விமர்சனம்

மெரினாவில் முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு மீண்டும் டெண்டர்; திராவிட மாடல் விநோதம் என அன்புமணி விமர்சனம்

மெரினாவில் முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு மீண்டும் டெண்டர்; திராவிட மாடல் விநோதம் என அன்புமணி விமர்சனம்

ADDED : ஜூன் 24, 2025 11:56 AM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னை மாநகராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது, திராவிட மாடல் ஆட்சியின் விநோதம் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;

சென்னை மெரினா கடற்கரையில் இயக்கப்படும் மின்கல (பேட்டரி) ஊர்திகளை நிறுத்துவதற்கான கட்டடம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது தான் அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் சென்னை மாநகராட்சியால் கோரப்பட்டுள்ளன. இத்தகைய அப்பட்டமான விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

அரசுத் துறைகளுக்காக ஏதேனும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்காக முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தகுதியுடைய ஒப்பந்ததாரருக்குத் தான் குறிப்பிட்ட பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும். இது தான் விதியாகும்.

சென்னை மெரினா கடற்கரையில் மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக தலா 11 பேர் அமரும் வசதி கொண்ட இரு மின்கல ஊர்திகள் கடந்த சில நாள்களாக இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்காக மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகில் வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.8.3 லட்சம் செலவில் மின்கல ஊர்திகளுக்கான வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த 20ம் தேதி கோரப்பட்டுள்ளன. ஜூன் 23ம் தேதி வரை பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் இன்று ஆய்வு செய்யப்பட்டு, கட்டுமானப்பணி செய்வதற்கான ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக இப்போது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டல அதிகாரியால் பதில் கூற முடியவில்லை. அப்படியானால், ஏற்கனவே கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடம் எந்த அடிப்படையில் கட்டப்பட்டது? அதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படாதது ஏன்? அதைக் கட்டியவர் யார்? என்பன உள்ளிட்ட எந்த கேள்விக்கும் அந்த அதிகாரியிடம் பதில் இல்லை.

மாநகராட்சிக்கு தெரியாமலேயே வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு உள்ளது என்பதும், அதை கட்டியவர்கள் யார்? என்பது தெரியாமலேயே அங்கு மின்கல ஊர்திகளை மாநகராட்சி பணியாளர்கள் நிறுத்துவதும் திராவிட மாடல் ஆட்சியின் வினோதங்கள். அடுத்த சில நாட்களில் மாநகராட்சிக்கு தெரியாமலேயே, வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டதற்கான தொகை யாருக்காவது வழங்கப்படும். அது திராவிட மாடல் அரசின் அதிசயமாக அமையும்.

மொத்தத்தில் முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசு ஆகும். இந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகு விரைவில் வரும்.

இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us