கைவிடப்பட்ட மாடு, நாய்களுக்கு 6 மாவட்டங்களில் பாதுகாப்பு மையம்
கைவிடப்பட்ட மாடு, நாய்களுக்கு 6 மாவட்டங்களில் பாதுகாப்பு மையம்
கைவிடப்பட்ட மாடு, நாய்களுக்கு 6 மாவட்டங்களில் பாதுகாப்பு மையம்
ADDED : செப் 24, 2025 08:28 PM
சென்னை:கைவிடப்பட்ட மாடு, நாய்களை பாதுகாக்கும் வகையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், கால்நடை பாதுகாப்பு மையம் அமைக்க, இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபாயில் ஆறு மாவட்டங்களில் கால்நடைகள் பாதுகாப்பு மையம் கட்ட, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட, ஆதர வற்ற மற்றும் அடிபட்ட மாடுகள், நாய்கள், சாலைகளில் திரிகின்றன. அவற்றை பாதுகாக்கவும், சிகிச்சை அளிக்கவும், உணவளிக்கவும் இந்த பாதுகாப்பு மையங்கள் கட்டப்படுகின்றன.
இதற்காக, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதற்கான, 'டெண்டர்' வழங்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
இந்த மையங்களில், கால்நடை டாக்டர்கள் நியமிக்கப்படுவர். பராமரிப்பு, உணவு போன்ற பணிகளை தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும்.
இதுகுறித்து, கால் நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அடிபட்ட பசு, மாடு மற்றும் நாய்களை பராமரிப்பது கடினமானது. மாடு மற்றும் நாயின் உரிமையாளர்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு இடையில், இவற்றை பராமரிப்பது சவாலானது.
இவற்றை கருத்தில் கொண்டு, இந்த கால் நடை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப் படுகின்றன.
இந்த மையங்களில், டாக்டர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் இருப்பர். மாடு, பசுக்களுக்கு தனியாகவும், நாய்களுக்கு தனியாகவும் மற்றும் வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு தனியாகவும் இருப்பிடம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.