பீஹாரில் இருந்து கள்ள துப்பாக்கி கடத்தல்; ரவுடி தம்பிராஜா கூட்டாளிகளுக்கு வலை
பீஹாரில் இருந்து கள்ள துப்பாக்கி கடத்தல்; ரவுடி தம்பிராஜா கூட்டாளிகளுக்கு வலை
பீஹாரில் இருந்து கள்ள துப்பாக்கி கடத்தல்; ரவுடி தம்பிராஜா கூட்டாளிகளுக்கு வலை
ADDED : ஜூன் 24, 2025 04:29 AM

சென்னை: பீஹார் மாநிலத்தில் இருந்து கள்ளத்துப்பாக்கிகளை கடத்தி வந்து, தமிழக ரவுடிகளுக்கு சப்ளை செய்து வரும், துாத்துக்குடி ரவுடி தம்பிராஜாவின் கூட்டாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் தம்பிராஜா, 55; ரவுடி. இவர் மீது, கொலை, ஆள் கடத்தல், வெடிகுண்டு தயாரிப்பு என, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
பிரகாஷ், கோல்டு வின்னர் என, பல பெயர்களில் கட்டப்பஞ்சாயத்து, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்தல், உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2008ல், சென்னை அயனாவரத்தில் பதுங்கி இருந்த, துாத்துக்குடியை சேர்ந்த ரவுடிகள் ஜெயகுமார், சுடலைமணி ஆகியோர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது, ஜெயகுமாரின் கூட்டாளியான தம்பிராஜா தப்பினார்.
இவர், சென்னையைச் சேர்ந்த ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளி சபியுல்லா, அவரது காதலி சானியாவை கடத்திய வழக்கிலும் தேடப்பட்டு வந்தார்.
தலைமறைவான தம்பிராஜா மற்றும் அவரது கூட்டாளிகள், பீஹார் மற்றும் உ.பி., மாநிலங்களில் இருந்து கள்ளத்துப்பாக்கிகளை கடத்தி வந்து, தமிழகத்தில் உள்ள ரவுடிகளுக்கு வினியோகம் செய்து வந்தனர்.
பீஹாரில் கடந்த ஆண்டு பதுங்கி இருந்த தம்பிராஜா; இவருக்கு கள்ளத்துப்பாக்கிகள் விற்று வந்த, அதே மாநிலத்தை சேர்ந்த இஸ்மாயில், 38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது, தம்பிராஜாவின் கூட்டாளிகள், கள்ளத்துப்பாக்கி கடத்தலில் ஈடுபட்டு வருவது, போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:
ரவுடிகளிடம் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் தலைதுாக்காமல் இருக்க, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். எங்களின் விசாரணையில், பீஹார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு, 10 கள்ளத்துப்பாக்கிகள் சமீபத்தில் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதில், ரவுடி தம்பிராஜாவின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தொடர்பு சங்கிலியை அறுத்து விட்டோம். ரவுடிகள் தனித்தனி தீவுகள் போல் சிதறுண்டு கிடக்கின்றனர்.
விரைவில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர். ரவுடிகளின் கள்ளத் துப்பாக்கி கலாசாரத்திற்கு முடிவு கட்டப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.